இந்திய கடல் எல்லையான நெடுந்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு, நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கை சிறையில் இருக்கும் 60 தமிழக மீனவர்களை மீட்டுத் தருமாறு கடிதம் எழுதினார். இந்நிலையில், இந்திய கடல் எல்லைப் பகுதியான நெடுந்தீவு அருகில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 7 மீனவர்களையும் கைது செய்து, காங்கேசன் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில், எல்லை தண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு 2 முதல் 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தமிழக அரசு இந்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.