முல்லை பெரியாறு வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அனுமதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 10ம் தேதி விசாரணைக்கு வந்த போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் ஆய்வு செய்ய தமிழகத்தை அனுமதிக்க முடியாது என கேரளா தெரிவித்தது.
மேலும், முல்லை பெரியாறு அணையை பராமரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது என்றும் கேரள அரசு தனது மனுவில் கூறியுள்ளது. வல்லக்கடவு – முல்லை பெரியாறு சாலையில் பொருட்களை ஏற்றிச் செல்ல தமிழக வாகனங்களை அனுமதிக்க முடியாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. அணையை பராமரிக்க உரிமை கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள கூறியிருந்தது. இதற்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இதுகுறித்து, தமிழக அரசு பதில் அளிக்க 3 வார கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளது.