அரச ஊடகங்கள் இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்தன என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுக்குரியவர். அதேசமயத்தில் அவர் அரச ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு மகாநாயக்க தேரர்களை பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே குற்றம் சாட்டினார்.
ராஜகிரிய சத்தர்மாராம விகாரையில் இடம்பெற்ற சத்தர்மாராஜித விகாரையில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட நாட்களாகவே இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குள் ஆட்பட்டிருந்தது என பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. அதனை கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
முன்னாள் ஊடகத்துறை அமைச்சருக்கு இது குறித்து நாங்கள் அறிவித்திருந்த போதும் அவர்கள் அதனை கருத்திற்கொள்ளவில்லை. அதனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இஸ்லாமியர்களின் ஆதிகத்திற்கு உள்ளாகியிருந்து.
அதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சென்றிருந்த போது அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அதனையிட்டு அவரை பாராட்ட வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
இருப்பினும் இன்று அரச ஊடகங்களை கொண்டு மகாநாயக்க தேரர்களை நிந்திக்கும் செயற்பாட்டினை அவர் உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விபசார தொழிலுக்கு நிகரான ஒன்றாக மாறிவிடும்.
எனவே அந்த நிலைமைக்கு தள்ளப்படாமல் அமைச்சர் மங்கள சமரவீர பாதுகாக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.