வடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நடைமுறை படுத்துவதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த இந்த மனுவில் பிரதிவாதிகளாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் 65,000 வீடுகளை அமைக்கும் கட்டுமான பணிகளை (Metal constriction France) மெடல் கன்ஸ்ட்ரக்ஷன் எனும் பிரெஞ்ச் நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் மேற்கொள்ளும் போது அரசாங்கம் கேள்வி பத்திரங்களை ( Tender ) கோரும் நடவடிக்கைளை முறையாக மேற்கொள்ள தவறியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இவ்வாறு அமைக்கப்படும் வீடுகள் குறைந்த தரத்தை கொண்டதாக அமையுமென்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சம்பந்தப்பட்ட வீடுகளை நீண்ட காலம் பயன்படுத்துவது குறித்து உத்தரவாதம் வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் எச்சரித்தார்.
எனவே இந்த வீட்டு திட்டத்தை சம்பந்தப்பட்ட பிரெஞ்ச் நிறுவனமூடாக கட்டப்பட கூடாதென்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானமொன்று எடுத்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த திட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாக குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், எனவே இந்த திட்டம் முன்னெடுப்பதை தடை செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.