புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையோ, அரசியலமைப்பு திருத்தத்திற்கான தேவையோ தற்போது காணப்படவில்லை என்று பௌத்த மகா சங்கங்கள் கடந்த வாரம் கூட்டாக அறிவித்திருக்கின்றன. இவ்வாறான தீர்மானமொன்றுக்கு பௌத்த மகா சங்கங்கள் வரும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன. ஆனாலும், அந்த அறிவிப்பு சற்றுத் தாமதமாக, குறிப்பாக அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகவிருந்த தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது, இரா.சம்பந்தனின் பெரும் கனவொன்றின் மீது கற்களை வீசியிருக்கின்றன.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்துக்குள் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்று சம்பந்தன் விரும்புகின்றார். அதன்மூலம், அரசியல் வரலாற்றில் தான் இல்லாத காலத்திலும் தன்னுடைய பெயரை முதன்நிலையில் பேண முடியும் என்றும் அவர் நம்புகின்றார். அதற்காக, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் எவ்வளவு தூரம் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதிலிருந்து விலகி நின்று, குறைப்பாடுள்ள தீர்வையேனும் சட்ட வலுவோடு இறுதி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றார். அதன்போக்கில், விரும்பியோ விரும்பாமலோ அரசாங்கம் இழுக்கும் எல்லாப் பக்கத்துக்கும் அலைக்கழியவும் அவர் தயாராக இருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷவின் அகற்றத்துக்கான இரகசியச் சந்திப்புக்கள் 2013களில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் சம்பந்தன், தன்னுடைய காலத்தில் ‘தீர்வு’ என்கிற ஒன்று கிடைத்துவிடும் என்று நம்பத் தொடங்கினார். குறிப்பாக, சர்வதேசத்தின் வாக்குறுதிகளும், மங்கள சமரவீரவின் வாய்ஜாலமும் அதனை இறுதியானது என்று எண்ண வைத்தது. குறிப்பாக, தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் தென்னிலங்கையை தான் தெளிவுபடுத்தி தீர்வு இலக்கை அடைவதற்கான ஏற்பாடுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று மங்கள சமரவீர சிங்கப்பூர் சந்திப்புக்களின் போதும், அதன் பின்னரான இலண்டன் சந்திப்புக்களிலும் குறிப்பிட்டிருந்தார். அது, அந்தச் சந்திப்புக்களில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும் வெற்றிக் கொள்வதற்கு போதுமானதாக இருந்தது.
இன்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இரண்டரை வருடங்களாகிவிட்டன. இலங்கை வரலாற்றில் பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றன. எதிர்க்கட்சி என்கிற நிலையில் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றைப் போலவே தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றது. ஆறு மாதங்களுக்குள் தீர்வு பற்றிய இணக்கப்பாட்டுக்கு வந்து, வரைபினை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர முடியும் என்று சம்பந்தன் நம்பினார். அதன்போக்கில் அவர், 2016க்குள் தீர்வு கிடைத்துவிடும் என்றும் பேசத் தொடங்கினார். ஆனால், அரசியலமைப்பு வழிநடத்தல் குழு மற்றும் உப குழுக்கள் அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான கட்டங்களில் தொடர்ச்சியாக தடைக்கற்கள் போடப்படுகின்றன. 65க்கும் அதிகமான தடவை கூடிவிட்ட அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் மற்றொரு தொடர் அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்தது. ஆனாலும், பௌத்த மகா சங்கங்களின் அறிவித்தலை அடுத்து, அதுவும் பிற்போடப்பட்டிருக்கின்றது.
இடைக்கால அறிக்கையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் மக்களைத் தயார்ப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தினைப் பெற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. தமிழ் மக்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இருக்கின்றது. அதுதான் அவர்களுக்கிடையிலான இணக்கம். அதன்பிரகாரம், சம்பந்தனும், சுமந்திரனும் கடந்த ஆறு ஏழு மாதங்களாக தீர்வு எப்படியிருக்கப் போகின்றது என்பதை பருமட்டாகக் கூறத் தொடங்கினார்கள்.
குறிப்பாக, தமிழ் மக்களை ‘ஏக்கிய இராச்சியத்துக்கு’ தயார்ப்படுத்தியும் வந்தார்கள். ‘சமஷ்டி’ என்கிற சொல்லாடல் இருக்காது, வடக்கு- கிழக்கு இணைப்புக்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்றும் அவர்கள் வெளிப்படையாக கூறத்தொடங்கினார்கள். அத்தோடு, பௌத்த மதத்துக்கான முன்னுரிமை என்பது புதிய அரசியலமைப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் சம்பந்தனும் சுமந்திரனும் ஆரம்பத்தில் சற்று எதிர்ப்பை வெளியிட்டாலும், பின்னர் அதற்கு இணங்கிக் கொண்டார்கள். இந்த விடயத்தைக் குறித்து அப்போது, கருத்து வெளியிட்ட இன்னொரு அரசியலமைப்பு வழிநடத்தல் குழு உறுப்பினர், “…பஸ்சை போக விட்டுக் கை காட்டுவதே தப்பு, இவர்கள் ரயிலை போகவிட்டுக் கை காட்டுகின்றார்கள்…” என்றார். இந்த விடயம் தொடர்பில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் இந்தப் பத்தியாளர் எழுதியிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடர்ச்சியாக பிளவுக்கான காட்சிகள் விரிந்து வருகின்ற நிலையில், குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட போது, தமிழரசுக் கட்சி ஒரு பக்கத்திலும், மற்றைய பங்காளிக் கட்சிகள் மறுபுறத்திலுமாக பிரிந்து நின்றன. அப்போது, சம்பந்தன் கூறினாராம், தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றைப் பெறும் வரையில் பிரிந்து நின்று சண்டை பிடிக்காதீர்கள், தீர்வைப் பெற்றதும் தான் அரசியலில் இருந்து விலகிவிடுவேன். அதன்பின்னர், பிரிந்து கொள்ளுங்கள். சண்டை பிடியுங்கள். தனித்தனியே தேர்தல்களில் போட்டியிடுங்கள் என்று. இதுகுறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சுமந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார்.
தீர்வொன்றைப் பெறும் வரையில் கூட்டமைப்பு நிலைக்க வேண்டும் என்பதை சம்பந்தன் மட்டுமல்ல. ரணில் விக்ரமசிங்கவும் விரும்புகின்றார். ஏனெனில், கூட்டமைப்பின் இறுதித் தீர்மானங்கள் சம்பந்தனாலேயே எடுக்கப்படுகின்றன. எவ்வளவு விமர்சனங்ளை எதிர்கொண்டாலும் அவர், தன்னுடைய நிலைப்பாடுகளில் இருந்து விலகியதில்லை. யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பு கடந்த 16 ஆண்டுகளாக சம்பந்தனின் சர்வாதிகாரத்துக்குள் இருப்பதாக குறிப்பிட்டார். இந்தக் கூற்று தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், தமிழ் மக்களும் குறிப்பிட்டளவு இணக்கமான கருத்தினையே கொண்டிருக்கின்றார்கள். ஆனால், சம்பந்தனை மீறிய ஆளுமையொன்றையும் தமிழ்த் தேசிய அரசியல் சூழல் இப்போது கொண்டிருக்கவில்லை என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளார்கள். இது, ஒட்டிக்கொள்ளவும், விலகிக்கொள்ளவும் முடியாத நிலை. இப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் சூழல் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்தான், பௌத்த மகா சங்கங்களின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
குறித்த அறிவிப்பு வெளியாகியதும் பாராளுமன்றத்தில் பேசிய சுமந்திரன் கூறினார், “….நாட்டில் என்ன நடக்கவேண்டும் என்பதை நான்கு பேர் சேர்ந்து தீர்மானித்தால், பாராளுமன்றம் எதற்கு? பாராளுமன்றமே சட்டவாக்க அதிகாரத்தைக் கொண்ட உயர்பீடம். இதற்கு மேலாக எவரும் இருக்க முடியாது. புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் போது தடங்கல்கள் வரும். அப்படி வரும் போது, புறமுதுகிட்டு ஓடிவிடாமல் மக்களால் கொடுக்கப்பட்ட ஆணைக்கு, அனைத்து மக்களின் உரிமைகளையும் நினைவில் கொண்டு சமூக ஒப்பந்தமான அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்….” என்றார். பௌத்த மகா சங்கங்கள் தொடர்பில் இவ்வளவு அதிருப்தியான கருத்துக்களை பாராளுமன்றத்துக்குள் அண்மைய காலத்துக்குள் யாரும் வெளியிட்டதில்லை.
ஏற்கனவே, தமது அரசியல் எதிரிகளால் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்ற கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற தலைமை(கள்), காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் சட்டமூலம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசாங்கம் காலம் தாழ்த்தி இழுத்தடிப்புக்களைச் செய்வது தொடர்பில் எரிச்சல் அடைந்திருக்கின்றது. அப்படியான நிலையில், புதிய அரசியலமைப்புக்கான பணிகளிலும் பெரும் தடைகளாக பௌத்த மகா சங்கங்கள் வந்திருப்பதும், அந்தத் தடையை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓடோடிச் சென்று கண்டியில் ஆணை பெற்று வந்திருப்பதும் ஜீரணிக்க முடியாத விடயம். அதனால்தான், அரசாங்கத்தின் மீதான எரிச்சலை சுமந்திரன் அப்படி வெளிப்படுத்த வேண்டி வந்திருக்கின்றது.
இதனிடையே, கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்குமாறு ஈனமான குரலில் பௌத்த மகா சங்கங்களை நோக்கி கோரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றனர். செல்வம் அடைக்கலநாதனோ, சம்பந்தன் பௌத்த மகா சங்கங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று கூறுயிருக்கின்றார். ஆனால், சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் அப்படியானதொரு எண்ணம் இருப்பதுபோல தெரியவில்லை. அவர்கள் இருவரும் பெரும் எரிச்சலோடு இருக்கின்றார்கள். குறிப்பாக, ரணில் விக்ரமசிங்கவினூடு எப்படியாவது விடயங்களைக் கையாள முடியும் என்றும் நம்புகின்றார்கள்.
ஆனால், தென்னிலங்கை அரசியல் என்பது தேர்தல் வெற்றிகளை பிரதானமாகவே கொண்டது. அதற்கான எதை வேண்டுமானாலும் செய்யவும், விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கும். அதன் அடிப்படைகளே, புதிய அரசியலமைப்பினை கடந்த ஒரு வருடமாக தாமதித்துக் கொள்ளவும் வைத்திருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஈனமான கர்ஜிப்பு தொடர்பில், மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கின்ற அச்சத்தினை, பௌத்த மகா சங்கங்களும், கூட்டு எதிரணியும் (மஹிந்த அணி) பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தச் சுழலை ரணில் விக்ரமசிங்க வெற்றி கொள்ளும் வரையில், புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புக்கள் இல்லை. அதுவரை இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும் காத்திருக்க வேண்டி வரும். அது சரியோ பிழையோ, தமிழ் மக்களும் அந்தக் கிளிகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஏனெனில், இங்கு மாற்று வழிகளும் இல்லை. மாற்றுத் தலைமைகளும் இல்லை. அதற்கான முனைப்புக்களும் இல்லை.