நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர விசேட பொலிஸ் நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்ட 110 பேரும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 772 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று அதிகாலை 1.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நான்கு மணி நேரங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர
வின் ஆலோசனைக்கு அமைய பிராந்தியங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் சுமார் 14 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகளுக்கு மேலதிகமாக இந்த நான்கு மணி நேரங்களுக்குள் 22210 மில்லி கிராம் ஹெரோயினும் 40428.82 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின் தொடர்பில் 85 வழக்குகளும் கஞ்சா தொடர்பில் 264 வழக்குகளும் இதன் போது பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனைவிட சட்டவிரோத மதுபானம் 37084 லீற்றர்களை இதன் போது கைப்பற்றியுள்ள பொலிஸார் இது தொடர்பில் 221 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் மணல் அகழ்வு, ஏற்றிச்செல்லல், பொது இடத்தில் குடி போதையுடன் அநாகரிகமாக செயற்படல், பாதைகளில் கழிவுகளை கொட்டுதல் தொடர்பில் 124 வழக்குகளையும், கைப்பற்றியுள்ள பொலிஸார் சட்ட விரோத ஆயுதங்கள் மூன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைக் குண்டொன்றும் இதன் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், குடி போதையில் வாகனம் செலுத்திய 368 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 320 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.