லண்டன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது பாக்கெட் மணியை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Grenfell டவர் குடியிருப்பில், கடந்த 14-ஆம் திகதி நடந்த தீ விபத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 79-பேர் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த கட்டிட விபத்தில் பலியானவர்களின் உடல்களைத் தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் Alfie Lindsey என்ற ஆறு வயது சிறுவன், தன் தந்தை Arthur உடன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று தான் சேர்த்து வைத்திருந்த பாக்கெட் மணியான £60 முதல் £70 பவுண்டுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்.
இந்த பணத்தை அவர் கிரஹாம் டாம்லினிடம் வழங்கினார். சிறுவனின் இந்த உதவி மனப்பான்மையை கண்டு நெகிழ்ச்சிகரமாக இருப்பதாக கிரஹாம் டாம்லின் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து சிறுவனின் தந்தை Arthur கூறுகையில், தீ விபத்து தொடர்பான காட்சிகளை தனது மகன் தொலைக்காட்சிகளில் பார்த்து உதவ முடிவெடுத்ததாகவும், அதனால் அவன் தான் வைத்திருந்த பாக்கெட் மணி சேமிப்பு பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.
சிறுவனின் இச்செயலுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.