தமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா? என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது.
ஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறியாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன.
வெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு பொது மக்களுக்கே தவிர மோதிக் கொள்பவர்களுக்கு அல்ல.
இந்த விடயத்தில் நந்தவனத்து ஆண்டிகளாக தமிழ் அரசியல்வாதிகள் மாறிவிட்டனரா? என்ற பலத்த கேள்வி உருவாக்கப்பட்டு விட்டது.
முக்கியமான விடயம், எந்த ஒரு சமூகமும், இனமும் ஒற்றுமை என்ற கட்டமைப்பில் இருந்து பின்வாங்கும் போது அந்த சமூகமோ, இனமோ அடிபட்டுப் போகும் நிலை உருவாகிவிடும் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள் முதல் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், கடும் போக்காளர்களுக்கும் ஓர் முக்கியத் தேவை இருந்தது.
“பிரபாகரனுக்கு பின்னர் தமக்கு எதிராக, தமது பிரதான எதிரியாக முன்னிருத்துவது யாரை?” என்பதே அது.
காரணம் அப்படி ஒருவர் இருக்கும் வரை மட்டுமே தமிழர்களின் தேவைகளை, உணர்வுகளை அடக்கியாள முடியும். எது எப்படியோ தமிழ்த் தலைமைகள் மத்தியில் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.
அதற்கு முக்கிய காரணம் உட்பூசல்கள் இருந்தாலும் கூட வெளியில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. இதனால் திணறிப்போய் இருந்த தெற்கு இனவாதிகளுக்கு கடந்த எழுக தமிழில் வடக்கு முதல்வரின் உரை தீனியாய் அமைந்து விட அவரை ஓர் இனவாதியாக சித்தரித்தனர்.
வடக்கில் இருந்து இராணுவங்களை அகற்றுதல், சிங்கள குடியேற்றங்களை கண்டித்தல் மற்றும் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதை எதிர்த்தல் போன்றன முக்கியம் என்பவற்றைக் கூறிய வடக்கு முதல்வர்.
நேற்றைய தினம் மீண்டும் ஓர் கருத்தைக் கூறியிருந்தார், அதாவது வடக்கில் அசாதாரணமான நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரையும், இராணுவத்தையும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சில கறுப்பாடுகள் பயன்படுத்திக் கொண்டால் இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் வடக்கு முதல்வர்.
இந்தக் கருத்துகளை வட முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு தரப்பினரைச் சுட்டிக்காட்டியே கூறியதாக எடுத்துக் கொண்டாலும், இராணுவ ஆட்சிக்கும், வடக்கை இராணுவத் தரப்பு கட்டுப்படுத்திக் கொள்ளவும் நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோமா? என்பதே தெளிவு.
இப்போது உள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதைய பிரச்சினைக்கு இராணுவத்தினரைக் கொண்டு வந்து சேர்ப்பது அது வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சமமானதே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.
அதேபோன்று வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தென் அரசியலைப் போன்று அவரிடமும் பேரம் பேசப்படுவதாக கூறியிருந்தார். இதே போன்றதொரு கருத்தினை குருகுலராஜாவும் முன்வைத்திருந்தார்.
ஆக இவற்றின் பின்னணியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சில சக்திகள் முனைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இதற்கான தீர்வு எட்டப்படுவது ஒற்றுமை என்ற ஒன்றின் மீது மட்டுமே தங்கியிருக்கும்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் குழப்பநிலையும், பலவீனங்களும் தோன்றிவிட்டன என்பதே உண்மை. ஆனால் இதில் தென்னிலங்கை இன்று வரை பாரிய தலையீட்டைச் செய்யவில்லை.
காரணம், வடக்கு பிளவுபட்டு மோதிக் கொள்வது என்பது அவர்களுக்கு கொண்டாட்டமே என்ற உண்மையை அறிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை தமிழ்த் தலைமைகள் செய்வது நல்லது.
குறிப்பாக இந்த பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்றன தமிழ் ஈழத்திற்காக, உரிமைக்காக போராடிய சமூகம் ஒரு மாகாண சபையினைக் கூட ஒற்றுமையாக நடத்த முடியாதா?
இந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதோடு அது விமர்சனங்களாகவும் மாறிவிட்டது. அதிலும் சிங்கள தலைமைகளுக்கு இது கேலிக் கூத்தாகவும், தமிழ் மக்களுக்கு வேதனையையும் அளிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது.
இவற்றை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு சிந்தித்துப் பார்த்தால், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குழுமோதல்கள், வாள் வெட்டுக்கள், விபச்சாரங்கள், போதைப்பொருட்கள் போன்றவை மட்டுமல்லாது தற்கொலைகள் உட்பட சில்லறைத் தனமான பிரச்சினைகளையும்.,
ஒரு தரப்பினர், ஒட்டுமொத்த வட தமிழ் சமூகத்தோடு இணைத்தும், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, தனிஈழம், விடுதலைப்புலிகள், உரிமைப்போராட்டம் என்பதோடு இணைத்தும் வாதப்பிரதிவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இதன் மூலம் தமிழ் மக்களை அடக்குவதே நோக்கம் என்பதனை வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் தனி மனித செயற்பாடுகளை உரிமைகள், இறைமைகள் சார்ந்த விடயமாக சித்தரிப்பது ஏன்? அது நியாயமான விடயமா? அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவர்கள் யார்?
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் வடமாகாண சபையோ அல்லது கிழக்கு மாகாண சபையோ என மாகாண சபை முறையினால் தமிழர்களின் பிரச்சினைக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வுகள் கிடைக்காது.
சுமார் 70 வருடங்களாக போராடிய சமூகத்திற்கு போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருவதற்கு ஒற்றுமை மட்டுமே பிரதான காரணம். அது இல்லாவிட்டால் எப்போதோ போராட்டம் சிதைவடைந்து இருக்கும்.
70 வருடங்கள் உரிமைக்காக போராடி வருவது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.
இந்த நிலையில் சாதாரண மாகாணசபை அதாவது தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு கொடுக்க முடியாத மாகாணசபையினால் தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை பிளவுபட்டு போவது என்பது வேடிக்கையான விடயம்.
இங்கு வேடிக்கை மட்டுமல்ல 70 வருடகாலத்தில் பாதி அகிம்சை, பாதி ஆயுதரீதியில் உரிமைகோரிய ஓர் சமூகத்தினை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளே இவை எனவும் கூறமுடியும்.
இப்போது ஏற்பட்டுள்ள வடமாகாணசபையின் குழப்பங்கள் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில் செயற்பட்டதா என்ற கேள்வியையும் கூட இன்று ஏற்படுத்தப்பட்டு விட்டது.
தமிழ் ஈழம் கேட்டுப் போராடிவர்களுக்கு ஒரு மாகாணசபையை கூட நடத்த முடியவில்லையா என்று தெற்கு கேள்வி எழுப்புகின்றது என அமைச்சர் மனோகணேசன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
அது உண்மைதான் ஆனாலும் தென்பகுதியில் ஊழல்கள் இல்லையா? உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன? எதுவுமில்லை.
காரணம் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை சீர்குலைக்கப்படுமாயின் அதன் இழப்பு அவர்களுக்கே என்பது நன்றாக கற்றறிந்து விட்ட ராஜ தந்திரிகள் அவர்கள்.
அதேபோன்று ஊழல்கள் இல்லாத இடம் இல்லை. ஊழல் ஒளிப்பு நல்லாட்சியிலும் அது தாராளமாக நடக்கின்றது. ஆனால் அது வடக்கில் நடைபெறும் போது பூதாகரமான விடயமாக மாற்றப்படுகின்றது.
இதற்காக ஊழலை வரவேற்பதோ அல்லது ஊழல் சரி என்றோ இங்கு வாதிட முன்வரவில்லை யதார்த்தம், உண்மை ஒற்றுமை மட்டும் வேண்டும் என்பதே.
வடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிப்பதோ, அதற்கு தீர்வு கண்டு அமைச்சர்களை பதவி விலக்குவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு என்பதில் எவ்வகையிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் இப்போது இந்த விடயம் வேறுவகையில் திசை திருப்பப்பட்டுவிட்டது. ஒரு சிலரின் செயற்பாடுகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்த்திவிடும் ஓர் திரை மறைவு நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
அறவழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடிய ஓர் சமூகம் கட்டுக்கோப்புடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால் அந்த போராட்டங்களையே மலினப்படுத்தி பேசுவதற்கு இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.
இப்போதைக்கு முக்கித் தேவை தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே. ஒற்றுமை இழப்பின் ஒட்டு மொத்தமும் சிதைவடையும் அபாயம் ஏற்பட்டு விட்டது என்ற புரிதல் அவசியம்.
அதனை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் வன்மத்தையும், காழ்ப்புணர்சியையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படும் இழப்பு மட்டுமே.
இப்போதைய சூழலில் வடக்கில் ஒரு சிறு பிரச்சினை புகைவிட்டாலும் அது பூதாகரமானதாக மாறி விடும். அப்போது தெற்கு, வடக்கில் தலையிடும். அது வரையில் பொறுமையாகவே தென்னிலங்கை இருக்கும்.
அதன்பின்னர் வடக்கில் இராணுவ ஆட்சியும் கூட ஏற்படுத்தப்படும் சாத்தியக்கூறு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை தடுத்து நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று தமிழ்ச்சமூகத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தமிழ்த் தலைமைகளின் முக்கிய பொறுப்பு.
தவறு செய்பவன் தண்டிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் அடுத்தவன் தவறு செய்வது தடுக்கப்படும். அதனை ஒற்றுமையான இணைந்து செயற்படுவது நன்று.
அதனை விடுத்து அதிகாரத்திற்காகவும், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் மட்டும் எத்தனித்தால் அதில் இலாபமடையப் போவது மாற்றான், பாதிப்படையப் போவது தமிழர்களே.
கூத்தாடிகளுக்கும், குளிர்காய நினைப்பவர்களுக்கும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டார்கள் என்பதனைப் புரியவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை புரிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.