கொள்ளையர்கள் அச்சுறுத்தல் காரணமாக பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த மரகத கல்லுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அமைத்துள்ளனர்.
360 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய மரகத கல்லுக்கு கொள்ளையர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் தமது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.
4.3அடி உயரம் கொண்ட இந்த மரகத கல்லானது அதன் எடை காரணமாக கொள்ளையில் இருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ள பெயர் வெளிப்படுத்தாத அந்த நபர், தற்போது துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பை ஏற்பாடு செய்துள்ளதுடன் ரகசிய இடத்திலும் குறித்த மரகத கல்லை இடம் மாற்றியுள்ளார்.
தற்போது அந்த கல்லானது எங்கே உள்ளது என்பது குறித்த எந்த தகவலும் வெளிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள அவர், பாதுகாப்பு கருதி தொடர்ந்து இடம் மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் இதே எடை கொண்ட கற்கள் இரண்டே எண்ணிக்கையில் உள்ளதாகவும், இன்னொரு கல்லின் உரிமை குறித்து பிரேசிலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சட்ட மோதல் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகாலமாக இதே தொழிலில் ஈடுபட்டுவரும் தமக்கு குறித்த மரகத கல் கிட்டியது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
விலைமதிப்பற்ற இந்த கல்லுக்கு இதுவரை ஐரோப்பா, ஐக்கிய அமீரகம், சீனா மற்றும் இந்தியாவில் இருந்தும் சிலர் விலைக்கு கேட்டு தம்மிடம் அணுகியுள்ளதாகவும், தமது குழுவினருடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு பதில் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தை மதிப்பின்படி 360 கிலோ எடை கொண்ட இந்த மரகத கல்லுக்கு சுமார் £238 மில்லியன் தொகைக்கு விற்பனையாகலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறித்த மரகத கல் கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் இருந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் 20 கிலோ எடை கொண்ட மரகத கல் ஒன்று கண்டெடுத்துள்ளனர்.
ஆனால் சட்டவிரோதமாக அந்த கல்லானது அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டதாகவும், குறித்த கல்லை மீட்கும் நடவடிக்கையில் சட்ட நிபுணர்களை நாடியுள்ளதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.