வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உருவாகியிருக்கும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.
இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே செல்வம் அடைக்கல நாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பமான சூழ்நிலையில், முதலமைச்சராக இருக்கும் விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாண சபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரக் கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.
இச் சந்திப்பின் போது, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.