45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு வயது மற்றும் அதற்கு குறைவான ஒரு இலட்சம் குழந்தைகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கான உயர்தர பராமரிப்புச் சேவைகளை பலரும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதுடன், தேவைப்படுவோருக்கு குழந்தைகள் பராமரிப்புக்காக கட்டண கழிவுகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கனடாவில் சிறுவர் பராமரிப்புக்காக அதிக அளவு கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக ரொரன்ரோ பெரும்பாகம் இருந்து வருகின்றது. ஒரு குழந்தைக்காக மாதம் ஒன்றுக்கு 1,649 டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருப்பதாக கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.