அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளது. காணாமல் போயுள்ள 79 பேரைத் தேடும் பணி தொடர்கின்றது. 147 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயந்தவர்களும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களும் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை 21 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
பகுதியளவில் சேதமடைந்துள்ள வீடுகளைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக தேசமடைந்துள்ள வீடுகளுக்கு அரசு நட்டஈடு வழங்கவுள்ளது.
அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நேற்றிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின. எனினும், வெள்ளநீர் இன்னும் வழிந்தோடாத பகுதிகளிலுள்ள சில பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருந்தன.
இரத்தினபுரி உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் வர்ண உடையுடன் பாடசாலைகளுக்கு வருகின்றனர். சீருடை வழங்கப்படும்வரை வர்ண உடை பாவிப்பதற்குரிய அனுமதியை
கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
கொப்பி, புத்தகம் உள்ளிட்ட வசதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு செய்துகொடுக்கப்படவுள்ளது. ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சால் விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.