ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் வார்னர் 4 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் – ஷிகர் தவான் டெல்லியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ஓட்டங்கள் குவித்ததால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 191 ஓட்டங்கள் குவித்தது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 51 பந்துகளுக்கு 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்களும், ஷிகர் தவான் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.டெல்லி அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் பில்லிங்க்ஸ் 13 ஓட்டங்களில் வெளியேறவே டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.
அதனை தொடந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் 42 ஓட்டங்களும், கருண் நாயர் 33 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – ஸ்ரேயாஸ் ஐயர் இறுதி வரை போராடியும் 20 ஓவர் முடிவில் 176 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.