வித்தியா படுகொலையில் சந்தேகநபர்களுக்கு திடீரென பலத்த பாதுகாப்பு! காரணம் என்ன?
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெறும் போது சந்தேகநபர்களுக்கான பாதுகாப்பு சாதாரணமாகவே கொடுக்கப்பட்டிருக்கும்.
சந்தேகநபர்களை நீதிமன்றிற்கு அழைத்து வந்து குறித்த விசாரணைகள் நடைபெற்று முடிந்ததும் அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஆனால் இன்று வித்தியா கொலை வழக்கு விசாரணைகள் இடம்பெறும் போது வழமைக்கு மாறாக நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு விசாரணைகள் ஆரம்பத்தில் நடைபெறும்போது, நீதிமன்றிற்கும் சந்தேகநபர்களுக்கும் பாதுகாப்பு அதிகரித்திருந்தது. ஆனால் இடையில் குறித்த பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று திடீரென குறித்த சந்தேகநபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பின் மத்தியிலேயே இவர்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமைக்கு காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில், பலருக்கும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அண்மையில் களுத்துறை சிறைச்சாலை பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் சிறைச்சாலை அதிகாரி, உத்தியோகஸ்தர், கைதிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.
இதை கருத்தில் கொண்டு இவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதா? அல்லது வித்தியா கொலை வழக்கில் 11ம் எதிரி அரச தரப்பு சாட்சியாளராக மாறியிருந்தார்.
இந்த நிலையில் இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.