சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் பரபரப்பான இறுதி நிமிடங்கள்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு நடந்தவை குறித்து, ஜஸ்டின் என்பவர் விவரித்துள்ளார்.
இவர், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவின் சித்தப்பா ஜஸ்டின் ஆவார்.
அவர் கூறியதாவது, மார்ச் 6-ம் திகதி 5.55-க்குத்தான் போட் கிளம்பினது. மொத்தம் 6 பேர் கிளம்பினாங்க. ரெண்டு படகு. அதுல ஒண்ணுலதான் பிரிட்ஜோ இருந்தான்.
இரவு நேரத்தில் கடலில் ரொம்ப இருட்டா இருக்கும். எப்பவுமே நாங்க இரவு படகுல போகும்போது, விளக்கு போட்டுக்கிட்டுத்தான் போவோம்.
அப்போதுதான், இலங்கைகாரர்களுக்கு நாங்கள் என்ன பண்றோம் அப்படின்னு தெரியும்.
லைட் போடாமப் போனவங்களைக் கண்மூடித்தனமா சுட்ட சம்பவமும் நடந்திருக்கு.
9 மணி இருக்கும். அப்போ திடீர்னு 10 பைக்ல நேவி ஆஃபீஸர்ஸ் வந்து எங்க படகைத் துரத்த ஆரம்பிச்சாங்க. நாங்களும் பதற்றத்துல வலையை அறுத்துட்டு படகை ஓட்டினோம்.
இத்தனைக்கும் நாங்க நம்ம நாட்டு எல்லைக்குள்ளேயேதான் படகை விரட்டினோம். திடீர்னு அவங்க எங்களைச் சுத்தி வளைச்சு துப்பாக்கி எடுத்துச் சுட ஆரம்பிச்சுட்டாங்க. பயந்து போன எல்லாரும் உள்ள ஒளிஞ்சுக்கிட்டாங்க.
கொஞ்ச நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்கலைன்னதும், அவங்க போயிட்டாங்களான்னு பார்க்க பிரிட்ஸோ எந்திரிச்சான். அந்த நேரம் பார்த்து குறி வெச்சு அவனோட கழுத்துல சுட்டாங்க நேவிகாரங்க! அப்போ ஓட்டுநர் ஜரோன், பதற்றமா எங்க மீனவர் சங்கத் தலைவருக்கு போன் பண்ணிச் சொன்னார். படகு ஓடிக்கிட்டேதான் இருக்கு. தப்பிக்கவே முடியவில்லை.
கோஸ்ட் கார்டு வந்தா மட்டும்தான் காப்பாத்த முடியும். உடனே கோஸ்ட்கார்டுக்குத் தகவல் சொன்னார் தலைவர். அவங்க எடுக்கவே இல்லை. அப்புறம் ஒருவழியா அவங்களே போன் பண்ணிக் கேட்டு, அவங்க வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு! 55 நிமிஷம் உயிரோட இருந்துருக்கான் பிரிட்ஜோ.
கோஸ்ட்கார்டு கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தாகூட காப்பாத்தி இருக்கலாம்!’’ என்று கூறியுள்ளார்.