ஜெனிவாவில் கால அவகாசம் கோரும் அரசுக்குச் சார்பான சிவில் சமூகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 2015இல் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நல்லாட்சி அரசுக்கு கால அவகாசத்தை வழங்கக்கோரும் சிவில் சமூகத்தின் மகஜர் ஒன்றில் தங்களைக் கேட்காமலே தங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மகஜரை அரசுக்குச் சார்பான சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஜெனிவாவில் வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் கையளித்துள்ளனர்.
இலங்கை அரசுக்குச் சார்பான சிவில் அமைப்புகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவு என்ற மகஜரில் இலங்கையைச் சேர்ந்த பல மனித உரிமை செயற்பட்டார்ளர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகளின் பெயர் விவரங்கள் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட மகஜர் 2015 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு கோருகின்றது.
எனினும், அரசின் மந்தகதியான நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துவந்த சிவில் சமூகத்தினரும், கல்விமான்களும் தங்களின் பெயர் விவரங்கள் இந்த மகஜரில் இணைக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வடபகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் அரசுக்குச் சார்பான மகஜர் ஒன்றுக்குத் தாங்கள் ஒருபோதும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதே மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோள் என அருட்தந்தை இம்மானுவல் செபமாலை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறிப்பிட்ட மகஜரின் நகல்வடிவம் தன்னிடம் காண்பிக்கப்பட்ட வேளை அதில் நல்லாட்சி அரசுக்குக் கால அவகாசம் வழங்கக்கோரும் விடயம் இடம்பெற்றிருக்கவில்லை என ஜெயபாலன் குரூஸ் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் ஜனவரியில் காண்பிக்கப்பட்ட நகல் வடிவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்தும் இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் பொதுமக்கள் மத்தியில் பணியாற்றுபவர்களைக் குறிப்பிட்ட மகஜரை தயாரித்தவர்கள் தவறாக வழிநடத்திவிட்டனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் ஒருபோதும் சர்ச்சைக்குரிய மகஜரில் கைச்சாத்திடவில்லை என்று பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார். அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு நான் ஆதரவளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களப் பேரினவாதத்தின் அழுத்தங்களினால் ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு பின்வாங்குகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக நான் குரல்கொடுத்து வருகின்றேன். இந்நிலையில், எனது பெயர், குறிப்பிட்ட மகஜரில் இடம்பெற்றுள்ளமை குறித்து கவலை வெளியிடுகின்றேன்.
மேலும் , இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களை நம்பிக்கை இழக்கச்செய்யும்” என்றும் பேராசிரியர் குமார் டேவிட் தெரிவித்துள்ளார்.