ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொதுக்கூட்ட அமர்வு ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை வாக்குறுதியளித்தபடி போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அத்துடன் அவ்வாறு கலப்பு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க இடமளிக்க முடியாது என்ற தீவிரமான நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக செயற்படுகின்றார்.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான இலங்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கால அவகாசமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையில் நாளைய தினம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் உரையாற்றவுள்ளார்.
கடந்தமுறை அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டிருந்த தீவிரமான நிலைப்பாடு தற்போது தணிந்துள்ள நிலையில், பிரித்தானியாவிலிருந்து புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.
இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையொன்றை இம்முறை பிரித்தானிய மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் முன்வைக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் இலங்கைக்கு எதிரான பரப்புரைகள் மற்றும் செயற்பாடுகளுக்காக தமிழீழ செயற்பாட்டாளர்கள் 15 பேர் அளவிலும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் 10 பேர் வரையிலும் ஜெனீவாவுக்கு வருகை தந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக இம்முறை மனித உரிமைகள் பேரவையின் அமர்வானது இலங்கை அரசாங்கத்தின் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டுள்ள நிலைக்கு ஒப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.