கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் நியாயமானது! தீர்வு கிடைப்பது எப்போது?
காணி மீட்புக்காக கடந்த மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தீர்வு கிடைக்காத நிலையில் இன்றும் தொடர்கின்றது.
இதேவேளை தமது பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வளம் நிறைந்த பகுதிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும் வளமில்லாத சூரிபுரப்பகுதியில் மாதிரி கிராமத்தை அமைத்து கேப்பாப்புலவு கிராமம் என்னும் பெயர் சூட்டி பொதுமக்கள் வளமுடன் வாழ்வதாக இராணுவத்தினர் பொய்பிரச்சாரம் செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் தமது வளமான நிலங்களை மீட்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கேப்பாப்புலவு கிராமத்தில் பொதுமக்களின் விருப்பங்களின்படி வீடுகள் அமைத்து அவற்றை உரிய முறையில் பொதுமக்களிடம் கையளித்தபோது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இராணுவத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல் காரணமாகவே தாம் மாதிரிக் கிராமத்தில் குடியேறியதாக குறிப்பிடுகின்றனர்.
பொதுமக்களின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவத்தினரின் தலையீடு இருந்தமையே இன்று அந்த மக்கள் வீதிக்கு வந்து போராட காரணம் என மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மக்களுக்கு நல்லாட்சி அரசு எவ்வாறான தீர்வினை வழங்கும் என்பது தொடர்பாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்மந்தன் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகின்றது.