ஓபிஎஸ் அணியினரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க அஞ்சும் சசிகலா தரப்பு: இதுதான் காரணம்!
ஓபிஎஸ் அணி எம்.எல்ஏக்களின் பதவியைப் பறித்தால் மக்களின் எதிர்ப்பை மேலும் உக்கிரமாக சம்பாதிக்க வேண்டி வரும் என்று சசிகலா தரப்பினர் தயக்கம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இதனால் அதிமுக பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாள்தோறும் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ் அணியை ஆதரிக்கும் 11 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக கட்சியின் கொறடா உத்தரவை மதிக்காமல் கட்சிக்கு எதிராக வாக்களித்ததாக கூறி அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பரவலாக கருத்து எழுந்தது.
ஆனால் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேவை இல்லாமல் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் இது திமுகவுக்கு பலமாக அமைந்துவிடும் என்றும் அதிமுக வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
அதுமட்டுமில்லாமல், 12 எம்.எல்.ஏக்களை நீக்கினால் அந்த தொகுதிகள் காலி இடமாக அறிவிக்கப்படும். இதனைத்தொடர்ந்து 6 மாதத்திற்குள் இடைதேர்தலை சந்திக்கநேரிடும். இதனால் அதிமுகவின் செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளதாக மூத்த தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
மேலும் சசிகலாவுக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை இருந்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில பத்திரிக்கைகள் நடத்திய கருத்துக்கணிப்புகளும், சமூக ஊடகங்களில் பரவிய கருத்துக்களும் அமைந்துள்ளது.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என்று பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையே பன்னீர்செல்வம் தரப்பினர் செம்மலையை கொறடாவாக நியமித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதோடு, உரிய அங்கிகாரம் பெற தேர்தல் ஆணையத்தை நாட ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தற்போது உள்ள சூழலில் 12 அதிருப்தி எம்.எல்.ஏக்களை நீக்கினால், எதிர்வரும் இடைத்தேர்தலில் காலியாக இருக்கும் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெறுவது கடினம் என கூறப்படுகிறது.
இது திமுக அல்லது பிறகட்சிகளுக்கு சாதகமாகிவிடும் என்றும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார சண்டையினால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.