கூரன் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : கனா புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : எஸ். ஏ. சந்திரசேகர், வை. ஜி. மகேந்திரன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியம், மதுசூதன் ராவ் மற்றும் பலர்.
இயக்கம் : நிதின் வேமுபதி
மதிப்பீடு : 2 / 5
செல்லப்பிராணியான நாய் ஒன்று நீதிமன்றத்தின் கதவை தட்டி நியாயம் கேட்கிறது என்றும், அதற்கு எஸ். ஏ. சந்திரசேகர் எனும் சட்டத்தரணி உதவி செய்கிறார் என்றும் படக் குழுவினர் விளம்பரப்படுத்தி இருந்தனர். இதனால் விலங்குகள் நல ஆர்வலர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது. அதனை படக்குழுவினர் பூர்த்தி செய்தனரா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மலைப்பாதை ஒன்றில் பயணம் மேற்கொள்ளும் மேட்டுக் குடியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் போதையின் உச்சத்தில் சாலையில் பயணிக்கும் போது செல்ல பிராணகயான நாய் ஒன்றின் குட்டி மீது மோதி விபத்தினை நிகழ்த்தி விடுகிறார்கள். இந்த விபத்தினை நேரில் பார்த்து பாதிக்கப்பட்ட அந்த குட்டி நாயின் தாயான நாய்… காவல் துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறு குரல் கொடுக்கிறது.
ஆனால் அவரது குரல் வழக்கமாக மறுக்கப்படுகிறது. பின்பு அந்த நாய் பிரபல சட்டத்தரணி தர்மராஜை சந்தித்து தனக்காக வாதாடுமாறு கேட்டுக்கொள்கிறது. தர்மராஜ் பாதிக்கப்பட்ட அந்தத் தாய்க்கு நியாயம் கிடைப்பதற்காக நீதிமன்றத்தின் உதவியுடன் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரிக்க உத்தரவிடுகிறது.
நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்கின் முறையாக விசாரிக்கப்பட்டு, சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கிறதா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
சட்டத்தரணி தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய முதுமையான வயதிலும் எஸ். ஏ. சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவருக்கு கைவந்த கலையான சட்டத்தரணி வாதங்களை நீதிமன்றத்தில் வைத்தாலும்.. அவருடைய உரையாடலில் வழக்கமான வேகம் மிஸ்ஸிங். இயல்புக்கு மீறி நிதானமாக பேசுகிறார். எதிராளி சட்டத்தரணியையும் அதையே பின்பற்றுமாறு சொல்கிறார்.
நீதியரசராக நடித்திருக்கும் வை. ஜி. மகேந்திரன் தன் அனுபவமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். கதையின் மையப்புள்ளியான நாய் – பல இடங்களில் குழந்தைத்தனமிக்க ரசிகர்களை கவர்கிறது.
படத்தின் திரைக்கதை இப்படித்தான் பயணிக்கும் என பார்வையாளர்கள் யூகிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் திரையில் தெரிவதால் வியப்பிற்கு பதிலாக சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் விபத்தினை நேரில் பார்த்த சாட்சி இருக்கிறார் என்று சொன்னதும் எதிர்த்தரப்பினர் மட்டுமல்ல பார்வையாளர்களும் வியப்பில் ஆழ்கிறார்கள்.
அந்த உச்சகட்ட காட்சி.. உண்மையில் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கிறது. அதிலும் பார்வை திறன் சவாலுள்ள மாற்று திறனாளி ஒருவர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கூறுவதும்.. அதனை அவர் நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக விவரிப்பதும் அபூர்வமானது. இந்த காட்சியை மட்டுமே நம்பி படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இது ஒரு தரப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தர்மராஜ் என்ற கதாபாத்திரம் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாகவும், அவர் தன்னுடைய வழக்கில் வெற்றி பெறுவதற்காகவும் பாதிக்கப்பட்ட அந்த நாயிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனின் பாதத்தில் சரண் புகுவதும்.. அதன் பிறகு இறைவனே சாட்சியாய் வருவதும் சமூக பக்தி படமாக விரிகிறது.
இதை தவிர்த்து படத்தின் ஒளிப்பதிவு- கலை இயக்கம்- படத்தொகுப்பு – பின்னணி இசை- பாடல்கள் – இவை அனைத்தும் குறைந்தபட்ச தரத்தில் வணிக நோக்கத்துடன் மட்டும் இருக்கிறது.
கூரன் – டிஜிட்டல் மனுநீதி சோழன்