நாடளாவிய ரீதியில் தற்போது இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசின் மீதான நம்பிக்கையும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் (Ganemulla Sanjeeva) துப்பாக்கி சூட்டு சம்பவம் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்த நிலையில், தற்போது அடுத்த சர்ச்சைக்குரிய விடயமாக கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21 ஆம் திகதி தலவாக்கலையை (Talawakelle) சேர்ந்த சசிகுமார் (Sasikumar) எனும் நபர் இருவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற துப்பாக்கிதாரிகளை கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்பின், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட காவல்துறையினர் துப்பாக்கிதாரிகளை அழைத்துச் சென்றபோது துப்பாக்கிதாரிகள் காவல்துறையினரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், துப்பாக்கிதாரிகள் காவல்துறையினரால் சுட்டுகொல்லப்பட்டமை குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயம் பாரிய சந்தேகத்திற்கிடமான கேள்விக்குட்படுத்தப்பட்ட விடயமாக மாறியுள்ளது.