கதாசிரியர் – வசனகர்த்தா- குணச்சித்திர நடிகர் – இயக்குநர்- கதையின் நாயகன் என தன் படைப்பாளுமைத் திறனை வெளிப்படுத்தி தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக முன்னேறி இருக்கும் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் தேசிங் பெரியசாமி சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிச்சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ குடும்பஸ்தன் ‘ எனும் திரைப்படத்தில் மணிகண்டன், சான்வீ மேக்னா, குரு சோமசுந்தரம் , ஆர் . சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் என். சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் ஒரு குடும்பஸ்தனின் அவஸ்தையும் ,ஆனந்தமும் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
இதன் காரணமாக இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பற்றி நாயகன் மணிகண்டன் பேசுகையில், ” இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்மை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்த தருணத்தில் அவரிடம் நான் ‘குட்நைட் ‘, ‘லவ்வர் ‘ என இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்த பிறகு உங்களுடைய படத்தில் நடிக்கிறேன் என்றேன். அவரும், படத்தின் தயாரிப்பாளரும் எமக்காக காத்திருந்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இன்றைய பொருளாதார சூழலில் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு அந்த குடும்பத்தின் தலைவர் எதிர்கொள்ளும் சாகசம் தான் இப்படத்தின் மையக் கதை. இந்த படத்தின் கதை களம் கொங்கு மண்டலம் என்பதால் முடிந்த வரை கொங்கு தமிழில் பேசி இருக்கிறேன். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன். ” என்றார்.