ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய தூய்மையான இலங்கை ( Clean Sri Lanka ) கருத்திட்டத்தை திட்டமிட்டு, நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்க, இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ்மா அதிபர்,நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பொறியிலாளர் குமுது லால் டி சில்வா ஆகியோர் அரச நிர்வாக கட்டமைப்பில் சார்பிலும்,
துறைசார் அடிப்படையில் ஐ.எஸ் ஜயரத்ன, கிஹான் டி சில்வா,சந்தியா சல்காது, கலாநிதி காமினி பட்டுவிடகே,கலாநிதி அனுருத்த கமகே, தில்ருக் வனசிங்க, தீபால் சூரியராராச்சி,சிசிர அமரபந்து, கிரிஷாந்த குரே, ஐயது பெரேரா,ருவன் வீரசூரிய, தயால் கருணாரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி எஸ்.குமாநாயக்க, மற்றும் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஆர்.டீ. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி எஸ். குமாநாயக்க செயலணிக்கான உறுப்பினர் நியமனம், மற்றும் செயலணியின் நோக்கம், விடயதானங்கள் உள்ளிட்ட விடயங்களை விபரித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரசுரித்துள்ளார்.
அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை பொருளாதார ரீதியில் மட்டுமன்றி, அரசியல், சமூக, கலாச்சார மற்றும் ஒழுக்க ரீதியிலும் பின்தங்கிய நிலைக்கு ஆளாகியுள்ளமையால் இலங்கைச் சமூகம் அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக காணப்படுவதால், இதுவரையான நிலைமையை மாற்றி நாட்டைப் புதியதொரு எழுச்சிக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்ற மக்களின் அபிலாசை கடந்த தேர்தல்கள் முடிவுகளில் தெளிவாக பிரதிபலித்தது.
முன்மாதிரியினை வழங்குதல், ஊக்குவித்தல், வழிகாட்டுதல் மற்றும் மாற்றத்துக்கான தேவைப்பாட்டை வலுவாக உறுதிப்படுத்துவதன் ஊடாக சமூகத்தின் நடத்தை ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வதகான அனுசக்தியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.அதன் மூலம் சமூகத்தை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டாயத்தை அரசாங்கம் அடையாளப்படுத்தியுள்ளது.
புதிய சிறந்த மாற்றங்கள் ஊடாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் தீர்க்கமான நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குக்கமைய, இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் மாற்றத்துக்கான ஒரு முயற்சி மற்றும் அதன் சமூக, சூழல் மற்றும் ஒழுக்கவியல் எழுச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தேசிய செயற்பாடொன்றை நடைமுறைப்படுத்தும் தேவை காணப்படுகிறது.
சூழல், பொருளாதாரம், சமூக உறுதிப்பாடு மற்றும் அரச பொறிமுறையை பலப்படுத்துவதற்கான மாற்றத்துக்கான ஒரு முயற்சி தேவை என்பதுடன் அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்துக்கு தார்மீக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நோக்கத்தை அடைந்துக் கொள்வதற்காக 2024.12.02 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ‘தூய்மையான இலங்கை (Clean Sri Lanka ) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதியால் 18 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
செயலணியின் பணிகளாவன,
சமூக, கலாசார மற்றும் ஒழுக்கவியல் எழுச்சி ஊடாக சமூகத்தை மிகவும் அபிவிருத்தியடைந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka ) கருத்திட்டத்தை திட்டமிடல், வழிநடத்துதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் உரிய கால எல்லையொன்றுக்குள் பூர்த்தி செய்தல் அத்துடன் இந்த கருத்திட்டத்தை தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் அமைப்புக் கட்டமைப்பு ஒன்றை தயாரித்தல்.
‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka ) கருத்திட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அறிவுடைய அறிஞர்கள், தொழில்வாண்மையாளர்கள், விசேட நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் விடயம் சார்ந்த திறன் மற்றும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளல்.
இந்த திட்டத்துடன் இணைந்ததாக அரச நிறுவனங்கள், தனியார் துறை, சர்வதேச அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் அபிவிருத்தி தரப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்கள், சமூகம் மற்றும் மக்கள் அமைப்புக்கள், வெகுசன ஊடக மற்றும் தொடர்பாடல் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மத ரீதியிலான அமைப்புக்கள், தொழில்நுட்படம் வழங்குநர்கள் மற்றும் புத்தாக்குனர்கள், புலம்பெயர்ந்தோர் போன்ற தரப்பினர் இத்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளும் கட்டமைப்பை தயாரித்தல்.
‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka ) நிதியத்துக்கான நிதி வழங்குதல் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு ‘தூய்மையான இலங்கை’ நிதியத்தைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்குதல் பிரதான பணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பு மற்றும் ஏனைய எழுதப்பட்ட சட்டங்களில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் பிரகார்,ஒப்படைக்கப்படும் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான வகையில் விடயங்களை விசாரிப்பதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும், ஜனாதிபதி செயலணி கருதும் அரச உத்தியோகஸ்த்தர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும், செயலணியின் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செயலணியின் உறுப்பினர்கள் குறித்த பணிகள் நிறைவேற்றல் தொடர்பில் அவ்வப்போது ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.