ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (19) இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டில் முதலாவது சம்பியன் பட்டத்தை சூடி ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் வரலாறு படைத்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அங்குரார்ப்பண லங்கா ரி10 சுப்பர் லீக் அத்தியாயத்தின் தொடக்கப் போட்டியிலும் முதாலாவது தகுதிகாண் போட்டியிலும் ஜெவ்னா டைட்டன்ஸிடம் தோல்வி அடைந்த ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் இறுதிப் போட்டியில் பதிலடி கொடுத்து வெற்றியீட்டி முந்தைய தோல்விகளை நிவர்த்தி செய்துகொண்டது.
முதல் சுற்றிலும் தகுதிகாண் சுற்றிலும் தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாடியதால் ஜெவ்னா டைட்டன்ஸ் வெற்றிபெறும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றும் ஜெவ்னா டைட்டன்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்ததால் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் பெரேரா (9) மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினார். ஆனால் முதலாவது விக்கெட்டில் மொஹம்மத் ஷாஸாத்துடன் 16 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.
மொத்த எண்ணிக்கை 38 ஓட்டங்களாக இருந்தபோது மொஹம்மத் ஷாஸாத் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சபிர் ரஹ்மான் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இந் நிலையில் ஷெவன் டெனியல், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 17 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர். (103 – 4 விக்.)
ஷெவன் டெனியல் 26 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ட்ரவீன் மெத்யூ 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா டைட்டன்ஸ் 10 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று இந்தத் தொடரில் தனது முதலாவது தோல்வியைத் தழுவி சம்பியன் பட்டத்தையும் தவறவிட்டது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டொம் கோஹ்லர் கெட்மோர 10 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழக்க ஜெவ்னா டைட்டன்ஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
அதன் பின்னர் டொம் ஆபெல் மாத்திரம் தனி ஒருவராகப் போராடி ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் அவரால் அணியின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
மத்திய வரிசையில் பவன் ரத்நாயக்க 10 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ரிச்சர்ட் க்ளீசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தசுன் ஷானக்க 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சம்பியனான ஹம்பாந்தொட்ட பங்ளா டைகர்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்துடன் 2 கோடியே 10 இலட்சம் ரூபா (75,000 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசையும் தனதாக்கிக்கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற ஜெவ்னா டைட்டன்ஸ் அணிக்கு ஒரு கோடியே 17 இலட்சம் ரூபா (40,000 அமெரிக்க டொலர்கள்) பணப்பரிசு கிடைத்தது.