விவசாய நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்து குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
குரங்குகள் தொடர்பான பிரச்சினை குறித்து விவசாய அமைச்சு அவதானம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. தொழிநுட்ப அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் இது வெ வ்வேறு மட்டங்களில் சிக்கலுக்குரிய பிரச்சினையாகியுள்ளது. சூழல் சமநிலையின்மையால் இப்பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான யோசனைகள் நீண்டகால திட்டங்களாகும்.
அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் காத்திருக்க முடியாது. எனவே குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. குரங்குகள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாறாக குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.