தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
நடிகர் நானி நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற ‘தசரா’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை நடிகர் நானியின் சொந்த பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘வன்முறையில் அவர் அமைதியை காண்கிறார்’ என்ற வாசகம் இடம் பிடித்திருப்பதாலும், அவை சிவப்பு வண்ண பின்னணியில் இடம் பிடித்திருப்பதால் இந்த திரைப்படம் அதிரடி எக்சன் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா தற்போது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விபரங்கள் அதன் பிறகு வெளியாகும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.