முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்வதுடன் தற்போது அரசியல்வாதியாகவும் உருமாற்றம் பெற்றிருக்கும் தளபதி விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார் என படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
‘வேட்டைக்காரன்’ எனும் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கிய அவரது மகன் ஜேசன் சஞ்சய் ..தற்போது இயக்குநராக உருவாகிறார்.
இவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ‘ கேப்டன் மில்லர்’ மற்றும் ‘ராயன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடுகையில்,
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக வேண்டும் எனும் அவருடைய விருப்பத்தை தெரிவித்து, அதற்காக ஒரு கதையையும் விவரித்தார்.
இழந்ததை நீங்கள் அதே இடத்தில் தேட வேண்டும்’ என்ற கதை கருவை கொண்ட அந்த கதை எங்களை ஈர்த்தது. இந்த திரைப்படத்திற்கு தற்போது பான் இந்திய அளவில் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் சந்தீப் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.
மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் ” என தெரிவித்திருக்கிறது.
இதனிடையே நடிகர் விஜயின் மகன் நடிகராக அறிமுகமாவார் என்று ஒரு பிரிவினரும், அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் என்றும்.. அதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக தோன்றுகிறார்
என்றும் தகவல்கள் வெளியானது என்பதும், இறுதியில் திரையுலக வணிகர்களிடம் குறைவான நம்பிக்கையை வணிக ரீதியாக பெற்றிருக்கும் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்பதும், இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.