தயாரிப்பு : ஐங்கரன் இன்டர்நேஷனல்
நடிகர்கள் : அதர்வா, சரத்குமார், ரகுமான், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், அம்மு அபிராமி, சந்தான பாரதி மற்றும் பலர்.
இயக்கம் : கார்த்திக் நரேன்
மதிப்பீடு : 2.5 /5
2016 ஆம் ஆண்டில் வெளியான ‘துருவங்கள் 16’ எனும் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய இளம் படைப்பாளி கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நிறங்கள் மூன்று’ எனும் திரைப்படம் பல்வேறு தடைகளையும், தாமதங்களையும் கடந்து வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஸ்ரீ (துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ்) பாடசாலை ஒன்றில் ஏ லெவல் கல்வியை பயிலும் மாணவர். பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் உளவியல் தாக்குதலுக்கு ஆளானவர். பார்வதி ( அம்மு அபிராமி) பாடசாலை ஒன்றில் ஏ லெவல் கல்வி பயிலும் மாணவி. இவரும் இவருடைய தந்தையின் நடவடிக்கையால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்.வெற்றி ( அதர்வா) திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றுபவர். இவரும் இவரது தந்தையின் நேர்மையற்ற நடவடிக்கையால் உளவியல் தாக்குதலுக்கு ஆளானவர். பெற்றோர்களுக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் இடையே உருவான இடைவெளியையும் .. அதற்கான அகச் சிக்கல்களையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கடினமான சூழலில் பார்வதி காணாமல் போகிறாள். அவரைத் தேடி ஸ்ரீ அலைகிறார். மறுபுறம் பார்வதியின் தந்தையான வசந்த் ( ரகுமான்) காணாமல் போன தன் மகளைக் கண்டுபிடிக்க காவல்துறையின் உதவியை நாடுகிறார். காவல்துறையின் அதிகாரியான செல்வம் ( சரத்குமார் ) இது தொடர்பாக தொடக்க நிலை நடவடிக்கையை மேற்கொள்கிறார். அதன் பிறகு காணாமல் போன பார்வதி கிடைக்கிறாரா? இல்லையா? என்பதையும், அதன் பின்னணியையும் , விரிவாக ஆராய்வதுடன் கதாபாத்திரங்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது. அதன் பிறகு என்ன? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
கதாபாத்திரங்கள் பதிலை தேடுவதாகவும் …தீர்வினை நோக்கி பயணிப்பதாகவும் …காரணத்தை கண்டறிவதற்காகவும் …விளக்கத்தை அறிந்து கொள்வதற்காகவும் .. அமைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம். அதே தருணத்தில் நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் போது தான் ஒவ்வொரு மனிதனின் அசலான குணம் வெளிப்படும் என்பதையும் காட்சிப்படுத்தி இருப்பதை ரசிக்க முடிகிறது. இப்படி கதையில் விவரிக்கப்பட்டிருக்கும் மூன்று முதன்மையான கதாபாத்திரங்களின் அக முகத்தை வெளி கொணர்வது தான் இப்படத்தின் திரைக்கதை என்றாலும் அதனை பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகளாக அடுக்கி.. நான் லீனியர் முறையில் இயக்குநர் சொல்லி இருப்பதும் ரசிக்க வைக்கிறது.
வெற்றி திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கிறார். இவர் வாய்ப்பை தேடி பயணிக்கும் போது கிடைக்கும் எதிர்மறையான பதிலால் மனதளவில் சோர்ந்து அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக போதைப் பொருட்களை பாவிக்கிறார். அதன் பிறகு ஒரு கற்பனையான உலகை சிருஷ்டித்து அதில் இன்பமாக பொழுதை கழிக்கிறார். இந்த கதாபாத்திர வடிவமைப்பு படைப்பாளிகள் குறித்து எதிர்மறையான பதிவுகளையே பார்வையாளர்களிடத்தில் உண்டாக்குகிறது.
ஸ்ரீ பாடசாலையில் படிக்கும் போது அவருடைய வகுப்பு ஆசிரியரான வசந்த் மீது பேரன்பு கொண்டிருக்கிறார். அவரை தனக்குரிய வழிகாட்டியாகவும் கருதுகிறார். ஒரு புள்ளியில் தன்னுடைய ஆசிரியரையும், பெற்றோரையும் சந்திக்க வைத்து பெற்றோருக்கும் தனக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வும் காண்கிறார். ஆனால் ஸ்ரீ- வசந்தின் மகளான பார்வதியை காதலிக்க தொடங்குகிறார். பார்வதியிடம் ஸ்ரீ காதலை சொல்ல .. அவள் ‘நாளை முடிவு சொல்கிறேன்’ என்று பதில் அளிக்கிறார். இதற்காக காத்திருக்கும் தருணத்தில் பார்வதி காணாமல் போகிறார். ஸ்ரீயும் பதட்டமடைகிறார். அவருடைய தந்தையான வசந்தும் பதற்றமடைகிறார். இறுதியில் வசந்த் காவல்துறை அதிகாரியான செல்வத்தை சந்தித்து தன் மகள் காணாமல் போனதாகவும், கண்டுபிடித்து தருமாறும் கேட்கிறார். கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்தி ரசிகர்களுக்கு நல்லதொரு திரில்லரான அனுபவத்தை வழங்குகிறார் இயக்குநர்.
முதல் பாதியில் சற்று மெதுவாக நகரத் தொடங்கும் திரைக்கதை.. இரண்டாம் பாதியில் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக செல்கிறது.
அதர்வா உதவி இயக்குநராக அற்புதமாக நடித்திருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியராக ரகுமான் நன்றாக நடித்திருக்கிறார். அவரின் கதாபாத்திரம் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி இருப்பதை நேர்த்தியாக விவரித்திருக்கும் இயக்குநரின் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக சரத்குமார் தன்னுடைய வழக்கமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். பார்வதியாக நடித்திருக்கும் அம்மு அபிராமியும், ஸ்ரீயாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாசும் இயக்குநர் சொன்னதை இயல்பாக நடித்து தங்களின் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவு -இசை- பாடல்கள் -பின்னணி இசை -படத்தொகுப்பு -கலை இயக்கம் – என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களுக்கு சுவாரசியமான விருந்தை வழங்கி இருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் ஜேனரிலான படைப்பை விரும்பும் ரசிகர்களுக்கு ‘நிறங்கள் மூன்று’ நிறைவைத் தரும் படைப்பு.
நிறங்கள் மூன்று – முத்துக்கள் மூன்று.