ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் நாளுக்கு முன்னதாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி (Vadamarachchi) பகுதியில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “போரினால் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார்கள் கூட உங்களது வாக்குறுதிகளை நம்பி வரலாற்றில் என்றுமில்லாதவாறு தங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இது தாங்கள் வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையில் ஆகும்.
யுத்தத்தில் மரணித்தவர்கள்
எனவே அந்த வாக்குறுதிகள் உண்மை எனில் தாங்கள் முதற்கட்டமாக யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும்.
அத்துடன் உண்மையான நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை நாட்டின் பிரதமராக நியமிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் நாள் தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.