எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு வேறு எந்த போட்டியாளர் மற்றும் இயக்குனர்களுடனும் தொடர்பும் இல்லை என முன்னாள் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
ஏனைய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் காரணமாக விலை திருத்தம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகம் நேற்று (04) அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேயசேகர குறித்த விடயத்தை இன்று (05) தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
விலை நிர்ணயம்
அதன்போது, எரிபொருள் விற்பனை அல்லது விலை நிர்ணயம் மூலம் மற்ற போட்டியாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக கடந்த அரசாங்கம் வேறு எந்த இயக்குனருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரம் இருப்பதாகவும் அந்த சூத்திரத்தின் படி இலங்கை கனியக் கூட்டுத்தாபனம் சுயாதீனமாக விலையை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.