தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘அமரன்’ எனும் திரைப்படத்தினை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு பிரத்யேகமாக நடைபெற்று அவை காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
‘அமரன்’ படத்தினை அறிமுகப்படுத்தும் காணொளி இரண்டு அத்தியாயங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் பங்கு பற்றி இருக்கிறார்கள்.
மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர மரணத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த சுயசரிதை திரைப்படத்தை வழக்கமான சுயசரிதை திரைப்படங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகவும், வணிக அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு ரசித்த குடியரசு தின விழா மற்றும் சுதந்திர தின விழாவிற்கான ராணுவ வீரர்களின் அணிவகுப்பு பிரம்மாண்டமாக படம் பார்க்கப்பட்டிருப்பதாகவும் இது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் என்றும் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட துல்லிய தாக்குதல் குறித்த போர்க் கள காட்சிகளை வி எஃப் எக்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உணர்வு பூர்வமான தேசப்பற்று உண்டாக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும் என்றனர்.
எனவே இந்த தீபாவளி திருநாளை பார்வையாளர்கள் தேசப்பற்று மிக்க தீபாவளியாக கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்தை பற்றியஅறிமுக நிகழ்வில் பங்கு பற்றிய உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு படைப்பை தயாரித்த தயாரிப்பாளர் என்ற கோணத்தில் மட்டுமே பேசியது சிலருக்கு அவரைப் பற்றிய தவறான புரிதலை உண்டாக்கியது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் ‘அமரன்’ படத்தின் அறிமுகம் இணையவாசிகளிடையே பாரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகிறது.
இருப்பினும் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி – ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரம் செறிந்த வாழ்வியல்- அவரது துணைவியாரின் துணிச்சல் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயல்பான கதை சொல்லல் பாணி – பின்னணி இசைக்காக தேசிய விருதினை வென்ற ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ்குமாரின் பங்களிப்பு – இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் பட்ஜட் என பல அம்சங்கள் இணைந்திருப்பதால் ‘அமரன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ஓரளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.