சமூக வலைதள வாசிகள், படப்பகடி சிந்தனையாளர்கள் ஆகியோர்களுக்கு விருப்பமான சின்னத்திரை மற்றும் டிஜிட்டல் திரை நிகழ்ச்சி பிக் பொஸ், இதுவரை ஏழு பாகங்களாக நிறைவடைந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் எட்டாவது பாகம் விரைவில் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ என்ற கவர்ச்சிகரமான வாசகங்களுடன் பிக் பொஸ் சீசன் 8 தொடங்குகிறது.
இதனை புதிய தொகுப்பாளரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
புதிய சீசனில் போட்டியாளர்களுக்கு இடையே புதிய போட்டிகள் இருக்கும் என்றும், இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றும் வகையில் கடந்த ஏழு பாகங்களில் பிக் பொஸ் வீட்டில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பங்கு பற்றும் புதிய வடிவிலான நிகழ்வு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவர் ஏற்றும் நடிக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் அவர் மேடையிலும், மக்கள் சந்திப்பிலும் தன்னுடைய இயல்பான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
அதனால் அவரது தொகுத்து வழங்கும் பாணி குறித்து பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக செயற்கையான சர்ச்சைகளை உண்டாக்கி அதனூடாக பார்வையாளர்களை கவர்ந்து நிகழ்ச்சியை பிரபலமாக்கும் உத்தியை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி எப்படி கையாள போகிறார்? என்பதைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பிக் பொஸ் சீசன் 8 நிகழ்வில் பங்குபற்றும் போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.. இந்நிகழ்ச்சி தொடங்கும் எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதியன்று மாலை தான் தெரியவரும்.
எதிர்வரும் ஒக்டோபர் ஆறாம் திகதி முதல் தொடர்ந்து நூறு நாட்களுக்கு சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர்களுக்கு ‘டிஜிட்டல் தீபாவளி’ என பார்வையாளர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.