தமிழ் மக்களுக்கான நேர்மையான தீர்வினை வழங்க ரணில் விக்கிரமசிங்கவால்தான் முடியும். அவருக்கே தமிழ் மக்களின் வாக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முடிவைப் பார்த்து மக்கள் தீர்மானிக்க மாட்டார்கள். மக்கள் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத்தான் தெரிவு செய்வார்கள். அவரால்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை நேர்மையாக தீர்க்க முடியும்.
இலங்கை தமிழ் அரசு கட்சிதான் தமிழ் மக்களின் கட்சி என கூறுவார்கள். ஆனால், இன்று இதன் நிலை என்ன? கட்சியில் நேரத்துக்கு ஒரு கதை.
சிலர் கட்சியை கைப்பற்றி முடிவுகளை தாமாக அறிவிக்கிறார்கள். முடிவுகளை ஜனநாயக ரீதியாக எடுக்காமல் தாமே முடிவுகளை எடுத்து மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்களிக்குமாறு அறிவிக்கிறார்கள். இது மக்களின் முடிவல்ல. தமிழ் மக்களின் முடிவு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வது என்பது மக்களின் முடிவாக உள்ளது. எதற்காகவென்றால், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவே.
கடந்த இரண்டு வருட காலமாக எங்களை மூச்செடுக்க செய்துள்ளார்கள். அடுத்து வரும் ஐந்து வருடங்கள் மிக முக்கியமான காலகட்டமாகும். பொருளாதார ரீதியில் எங்களை மீட்டெடுப்பதற்கு தகுதியான தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும் தான் நாங்கள் வாக்களிக்க வேண்டும். அவர் வந்தால்தான் இந்த நாடு முன்னேறும். அதன் மூலம் நாங்கள் முன்னேற முடியும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டார்கள். தமிழ் அரசுக் கட்சி தற்போது குழப்பம் நிறைந்த கட்சியாகவே உள்ளது. அதற்குள் இருக்கும் சுய நலன்கள், ஜனநாயகமற்ற முறையில் எடுக்கின்ற தீர்மானங்கள் மக்களை அவமானப்படுத்துகிறது மக்களுக்கு தலைமைத்துவம் தேவைப்படும் நேரத்தில் அதிகாரமாக, தன்னிச்சையாக ஒருவர் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு என்ற அதிகாரத் தொனியில் மக்கள் மீது திணிக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது.
இம்முறை ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கே வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முழுமையான வாக்குகளை அளிப்பார்கள்.
அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு என்பவற்றோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க செயற்பாடு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான உச்ச அதிகாரம் பகிர்வதற்கான பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கு இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறான பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து வருட காலத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு ஒரு நேர்மையான தீர்வினை முன்வைப்பதற்கு அவரால்தான் முடியும். எனவே, அவரை வெற்றி பெறச் செய்வோம் என்றார்.