சென்னை – யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது.
இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.
பலாலியில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.