ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் பதவி வகிக்கும் ஒவ்வொரு ஆணையாளர்களும் தாம் பதவியில் இருந்து விடைபெறுகின்ற தருணத்திலும் பதவி முடிந்த பின்னரும் இலங்கை விவகாரத்தில் சர்வதேச நீதிப்பொறிமுறை வேண்டும் என்று வலியுறுத்துவது வழக்கமாகிவிட்டது.
அதேபோல இதற்கு முன்பு மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக இருந்த மிசேல் பசேலட் அம்மையார் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதனை ஐ.நாவில் இதற்கு முன்பாக இருந்த 26 ஆணையாளர்களும் இதனை வழிமொழிந்துள்ளனர்.
எனவே இலங்கையில் நடந்த இனப்படுகொலை அநீதி விடயத்தில் உலகம் இன்னும் ஏன் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது? பாதிக்கப்பட்ட சனங்களுக்கு நீதியை வழங்குவதற்காக சர்வதேசம் இனியாவது கண்களைத் திறக்குமா?
வடக்கு கிழக்கில் போராட்டம்
ஓகஸ்ட் 30, நேற்றைய நாள், சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். இந்த நாளில் வடக்கு கிழக்கு தமிழர் தேசம், நீதிக்கான போராட்டத்தை பேரெடுப்பில் முன்னெடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஸ்டான்லி வீதியில் ஆரம்பித்த போராட்டம் முனியப்பர் கோவில் வரை முன்னெடுக்கப்பட்டது.
அதேபோன்று கிளிநொச்சியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி வேண்டிய போராட்டத்தைத முன்னெடுத்தனர். அத்தோடு வவுனியாவில் 2750ஆவது நாளாக நேற்றைய நாள் நீதியை வலியுறுத்திய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டத்தை பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெத்து வருகின்றார்கள். பன்னாட்டு விசாரணையை வலியுறுத்திய மக்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் கொடிகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நேற்றைய நாள், வடக்கு கிழக்கே போராட்ட கோலம் பூண்டிருந்தது. வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை மற்றும் நீதி வேண்டிய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் திருகோணமலையில் சிறிலங்கா அரசின் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நினைவேந்தலை தடுக்க வேண்டாம் என்றும் அதனை குற்றச் செயலாக பார்க்கும் அணுகுமுறையை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்ப்பையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் பன்னாட்டுச் சமூகம் வலியுறுத்திய நிலையிலும் வடக்கு கிழக்கில் மக்கள்மீது தொடர்கின்ற அடக்குமுறையை நேற்று திருகோணமலை எடுத்தியம்பி இருக்கின்றது.
உருக்கமான கோரிக்கை
இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பன்னாட்டுச் சமூகத்தை நோக்கி மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். நாம் உயிரோடு உள்ளபோதே நீதியை தாருங்கள் என்பதுவே அந்தக் கோரிக்கை. வலி மிகுந்த இந்த வேண்டுதலின் பின்னால் உள்ள ஈரத்தையும் நெருப்பையும் கொடுமையையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் கால விரயங்களைச் செய்யாது சிறிலங்காவை பொறுப்புக் கூறவைக்கும் வகையில் பொருத்தமான சர்வதேச நீதிப் பொறிமுறையை (ICC ) பிரயோகித்து எங்களுக்கான நீதியை நாம் உயிருடன் இருக்கும் போதே பெற்றுத் தாருங்கள் என்று அந்த மக்கள் உருக்கமாக விடுத்த வேண்டுதலை இந்த உலகம் இனியேனும் நிறைவேற்ற வேண்டும்.
தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பலர் அவர்களை தேடித் தேடியே இறந்து வருகின்றனர். இல்லாமல் ஆகி வருகின்றனர். இது மிகப் பெரிய அவலமல்லவா…
“முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த இலங்கையின் இனப்படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில், 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர் என மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
அவர்களது உறவினர்களால் இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 21,000 க்கும் மேற்பட்டவர்கள் உட்பட, பலவந்தமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 50,000 மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமாக இலங்கையால் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் பயன்படுத்தப்பட்டது.” என்றும் மக்கள் ஐ.நாவுக்கு எழுதிய கடித்தில் கூறியுள்ளனர்.
செவிசாய்க்காத அரசு
அத்துடன் “எமது உயிரிலும் மேலான உறவுகளை பறிகொடுத்துவிட்டு வயதான காலத்திலும் நீதி கேட்டு போராடும் நாம், சர்வதேச நீதி பொறிமுறை தவிர்ந்த எந்த சமரசத்தையும் ஏற்றுகொள்ள மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்பதையும் அழுத்தம் திருத்தமாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தடன் முன்னாள் ஐ.நா ஆணையாளர் மிசேல் பசேலெட் அறிக்கையில் சிறிலங்கா விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரப்படுத்தும் பரிந்துரையை வழங்கி இருந்த நிலையில் ஐ.நாவின் 26 முன்னாள் ஆணையாளர்களும் வழிமொழிந்திருந்தமையும் பாதிக்கப்பட்ட உறவுகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆணையாளர் முழுமையான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதை குற்றச்செயல்களில் இருந்து நீக்கி, அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாறுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தி இருந்தார்.
என்றபோதும் சிறிலங்கா அரசு இவைகளுக்கு செவிசாய்ப்பதில்லை என்று மனித உரிமைகளுக்கு விரோதமாக நடப்பதில் மிக உறுதியாக இருக்கின்றது. நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்குதல், பொறுப்புக் கூறலை வழங்குதல் என்பன பற்றி பொறுப்பேதும் சிறிலங்காவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
மறுக்கும் சிறிலங்கா
2009இல் நடந்த போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும், இலங்கை ஏற்றுக்கொள்ளாது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் தெரிவித்திருப்பதே இதனை உணர்த்தி நிற்கிறது.
அத்துடன் 2022ஆம் ஆண்டு இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளதாகவும் அத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வெளிநாட்டில் நீதிமன்ற வழக்கைத் தொடங்குவதற்கான முன்மொழிவுடன் அரசாங்கம் முற்றிலும் உடன்படவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது, இலங்கையின் இறையாண்மைக்கும், சட்ட அமைப்பின் இறையாண்மைக்கும் எதிரானது என்றம் அத்துடன் இலங்கையின் நீதித்துறை அத்தகைய தலையீட்டை அனுமதிக்காது என்றும் அமைச்சர் கூறியுள்ளது கொஞ்சம் வேடிக்கையாகவும் உள்ளது.
இலங்கையில் நீதித்துறை இருக்கிறதா… ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு இனவழிப்புக்களும் இனப்படுகொலைகளும் நடந்தபோது நீதித்துறை என்ன செய்தது…அல்லது அந்த நீதித்துறையின் நிழலில்தான் இவையெல்லாம் நடந்ததா..
ஆனால் நேற்று நடந்த போராட்டத்தில் சர்வதேச பொறிமுறை தவிர்ந்த எந்த அணுகுமுறைக்கும் தாம் உடன்பட மாட்டோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளார்கள்.
அத்துடன் சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதும் அவர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
இனப்படுகொலைக் குற்றங்களை இழைத்தவர்களே நீதிபதியாகுவதை பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிப்பது நியமான அணுகுமுறைதானே. இந்த விடயத்தில் இனியாவது சர்வதேசம் பாதிக்கப்பட்ட மக்களின் இறுதிக்குரலுக்கு செவிசாய்க்க வேண்டும்.
தீபச்செல்வன்