மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, அதனை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தமக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“ஹம்பாந்தோட்டைக்கு இதற்கு முன்னர் வந்த போது எனது மேடையில் இப்போதிருக்கும் அமைச்சர்கள் இருக்கவில்லை. எமக்கு ஆதரவளித்த பலரை அன்று ஜே.வி.பி.யினர் கொன்றுவிட்டனர்.
2022 ஆம் ஆண்டில் நான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். அனுர, சஜித்திடம் உதவி கேட்டேன். அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர். நாம் ஏற்படுத்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்கவே மீண்டும் போட்டியிடுகிறேன்.
அன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி முற்றாகச் சரிந்து கிடந்தது. அன்று விவசாயிகளுக்கு உரம் தேவைப்பட்டது. அதனைப் பெற்றுக்கொடுக்க வழி செய்தேன். சுற்றாலாவைப் பலப்படுத்தினோம். அதற்கு உதவிகளை வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அதனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களையும் செயற்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம். அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரித்தோம். அதற்கான நிதியை விவசாயிகளே தேடித்தந்தனர்.
எதிர்காலத்தில் கரும்பு உற்பத்திக்கும் நாம் உர மானியம் வழங்குவோம். நாட்டில் நிதி இருந்தால் மட்டுமே சலுகை வழங்க முடியும். எண் கணிதம் அறியாதவர்கள் இன்று ஜனாதிபதியாக முயற்சிக்கின்றனர். நாம் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
நான்கு வருடங்கள் இளையோருக்கு தொழில் கிடைக்கவில்லை. 50 ஆயிரம் பேருக்கு விருப்பமான தொழில் கல்வி பயிலவும் நிதி நிவாரணம் வழங்குவோம். இதனைப் பார்த்து 10 இலட்சம் பேருக்கு தொழில் தருவோம் என்று சஜித் அணியினர் பொய் சொல்லுவார்கள்.
செப்டெம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டருக்கும் இருக்காது, துறைமுகமும் இருக்காது. தொழிற்சாலைகளும் வராது.” என்று தெரிவித்தார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர
“எவரும் ஏற்காத நாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டது மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாம் ஆதரவளிக்க காரணமாகும். நாம் மக்களுக்கும் உரம் வழங்க முயற்சித்த வேலையில் ஜே.வி.பி. அதற்கு தடைபோட முற்பட்டது.
இன்று வௌிநாடுகளுக்கும் நாம் அரசி விநியோகிக்கும் அளவிற்கு ஜனாதிபதி வழி செய்திருக்கிறார். மற்றைய கட்சிகள் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க பார்ப்பவையாக இருக்கிறதே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என்பது தெரிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கும் போது புதிய தலைவர்களைக் கொண்டு வந்து பரீட்சித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிதுந்துகொள்ள வேண்டியது அவசியம்.” என்றார்.
அமைச்சர் ரமேஷ் பதிரன
”தேசிய பாதுகாப்பின்போது இந்நாட்டின் ஒருமைப்பாடு மாத்திரமன்றி பொருளாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பும் மிக முக்கியம். கடந்த பொருளாதார நெருக்கடியின்போது சஜித் பிரேமதாஸ உட்பட பிரதான எதிர்கட்சிகளுக்கு இந்நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்புவிடுத்த நேரம் யாரும் முன்வரவில்லை. அந்த காலகட்டத்தில் இலங்கையை பொருளாதார ரீதியில் மீட்டெடுப்பது நம்பமுடியாத, சாத்தியமற்ற மற்றும் ஒரு சாகசமான செயலாகும் என்று அன்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார். அவ்வாறான சாகசமான செயலை இன்று எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்த காட்டியுள்ளார்.
எமது நாட்டைப் போன்று உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. அவை மீண்டு வர பல வருடங்கள் ஆனது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று குறுகிய காலத்திலே பொருளாதார ஸ்திரநிலைமையை ஏற்படுத்த அவசியமான பணிகளை மேற்கொண்டார். அதனால் இன்று இந்த நாடு மீண்டு வந்துள்ளது. எனவே இந்தப் பயணத்தை நாம் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதன்போது பரீட்சித்துப் பார்ப்போம் என்று தீர்மானிக்க முடியாது.
நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டோம். எனவே நாம் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டே எமது முடிவுகளை எடுக்க வேண்டும். இதுவரை வெற்றிகரமாக முன்னெடுத்த பாதைக்குச் சொந்தக்காரரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே நாம் எதிர்காலத்திலும் பயணிக்க வேண்டும். எமது நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு எமது நன்றிக்கடனை செலுத்த வேண்டும். எனவே நாம் மனச்சாட்சியுள்ள, நன்றியுள்ள மனிதர்கள் என்ற வகையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து அதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து இந்த ஹம்பாத்தோட்டை மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அமோக வெற்றியைப் பெற்றுத்தருமாறு உங்கள் அனைவரிடமும் மிக கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ
“அரகலய இருந்த காலத்தில் ஆளும் கட்சியினர் செத்துப் பிழைக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது. இன்று பங்களாதேஷில் காணும் காட்சிகளை அன்று இலங்கையில் பார்த்தோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். பாராளுமன்றத்திற்கு தீ வைக்க முயற்சித்தனர்.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கு இடமளிக்கவில்லை. அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது துணிச்சலை காண்பித்தார். அப்போது சபாநாயகர் கட்சி தலைவர்களை அழைத்து பேசிய போது அதற்கு செல்லக்கூட எனது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. எம்மீது தாக்குதல் நடத்தப்படும் என அஞ்சினர்.
ஆனால், ரணில் விக்ரமசிங்கவை எமது கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவியில் அமர்த்த ஆதரவளித்தோம். அதனால் இரு வருடங்களுடன் அவருடைய பாதுகாப்பின் கீழ் மக்கள் சுமூகமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பினோம்.
அதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நேரத்தில் நாங்களும் கைவிடப்போவதில்லை. நான் பிரதி சபாநாயகர் என்ற வகையில், பாராளுமன்றத்தில் நூற்றுக்கு 100 புள்ளிகளை வழங்கக்கூடிய தலைவர் என்று ரணில் விக்ரமசிங்கவை மட்டுமே சொல்லுவேன்.” என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 பேர் முன்வந்துள்ளனர். அவர்கள் பெருமளவு செலவு செய்து பிரசாரம் செய்கின்றனர். 2022 இல் இவர்கள் எவரும் நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. அன்று நான் எதிர்கட்சித் தலைவருடன் இருந்தேன். அவரை அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினோம். அன்று ஹர்ஷ டி சில்வா போன்றவர்கள் அதிகாரத்தில் கை வைத்தால் சுட்டுவிடும் என்று எதிர்கட்சித் தலைவரை பயம் காட்டினர்.
மக்கள் வரிசைகளில் அல்லாடினர். துறைமுகத்துக்கு வந்த கப்பல்கள் திரும்பிச் சென்றனர். ஒரு நாள் நாட்டு மக்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் இருந்தனர். ஒரு சதம் கூடம் இல்லாத நாட்டைத் தான் ரணில் விக்ரமசிங்கவிடம் கிடைத்தது.
ரணில் ஏற்றுக்கொண்ட பின்னர் சஜித்துக்கும் பதவி மீது ஆசை வந்தது. மறுமுனையில் அனுரவுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். அனுரவும் ஓடி மறைந்தார். சரத் பொன்சேகாவையும் அழைத்தார்.அவரும் நிபந்தனைகளை கூறினார். அன்று ஒருவரும் ஆட்சியை ஏற்க தயாராக இருக்கவில்லை. அப்படியிருந்த நாட்டை பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்”
ஜனாதிபதி ஆலோசகர் மனூஷ நாணாயக்கார
”சவாலுக்கு அஞ்சி ஓடி ஒளிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என நான் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த தேர்தல்களில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்காவிட்டாலும் இந்நாட்டை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் நாடு வீழ்ச்சியடைந்தபோது மக்களைப் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்க முன்வந்தார்.
மக்கள் படும் துன்பத்தைப் பாதுகாத்துக்கொண்டிராத தலைவர் என்ற வகையிலேயே அவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். கடந்த பொருளாதார நெருக்கடி ஒரு திரைப்படம் என்றால் நாம் அதன் இடைவேளையில் இருக்கிறோம். இப்போது மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதா அல்லது அலைகளில் சிக்கி மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்வதா? என்று தீர்மானிக்கும் நாள் தான் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி. இன்று இந்த நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே முடியும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இம்முறை வாக்களித்துப் பார்ப்போம், என்று பரீட்சித்துப் பார்க்கும் செயலைச் செய்து அதலபாதாளத்தில் விழுவதா? என்று மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமுல்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய பங்களாதேஷ் ஒரு நல்ல உதாரணமாகும். இன்று நீங்கள் பாருங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஜே.வி.பியின் கட்அவுட்கள், பேனர்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாரிய மின்விளம்பர பதாதைகளுடன் கூடிய பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? கடந்த காலங்களில் அவர்கள் உண்டியல்களைக் குலுக்கி கட்சிக்கு நிதி சேகரித்தது போன்று இதற்கும் உண்டியல்களை குலுக்கித் தான் பணம் சேகரிக்கின்றார்களா? என்று கேட்க விரும்புகிறேன். இல்லை. இலங்கை போன்று எமது பிராந்திய நாடுகளை வீழ்ச்சியுறச் செய்யும் சில நாசகார குழுக்கள் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தடுத்து மீண்டும் எமது நாட்டை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைச் செய்ய பாரிய அளவில் பணத்தைச் செலவழிக்கிறார்கள்.
இப்போது ஜே.வி.பியின் கற்பனைக் கதைப் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 98 ஆம் பக்கத்தில் சுவாரசியமான ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகப் பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டடுள்ளது. நான் அப்படி என்றால் என்று தேடிப்பார்த்தேன். இவர்கள் கூறும் ஜனநாயகப் பொருளாதாரம் என்பது கஷ்டப்பட்டு, உழைத்து பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கு கொடுத்து அனைவருக்கும் பொருளாதார ரீதியில் சமமாக பகிர்ந்தளிக்கும் கலாசாரத்தை உருவாக்குவதே இவர்களின் திட்டமாகும்.
நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை பறித்தெடுக்கும் முறையையே அவர்கள் முன்னெடுக்கப் போகிறார்கள். நாம் திசைகாட்டிக்கே என்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு எமது நாட்டில் அலைகள் ஏற்படுத்தப்படுவதால் முதலீட்டாளர்கள் இன்று அச்சப்பட்டு அவர்களின் பணத்தை வெளிநாடுகளிலேயே வைத்தக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதுதான் வெளியில் இருந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையச் செய்யும் திட்டமாகும் என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.
இவ்வாறு செய்ய முடியாத அலைகள் இன்றி இந்த நாட்டில் யதார்த்தபூர்மாக்கக் கூடிய திட்டங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முன்வைத்துள்ளார். அந்தவேலைத் திட்டத்துடன் ஒன்றினையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.