நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது. கட்சிக் கொடியை ஏற்றி வைப்பதோடு, கொடிப் பாடலையும் வெளியிடுவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஆக. 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.. சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம்.
அப்படியான வரமாக இறைவனும், இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.
தொடர்ந்து, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த அறிவிப்பால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.