பெருந்தொகையான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நாடு இலங்கை. இலங்கையின் கிரிக்கெட் கலாச்சாரம் மிகவும் இனிமையானது. கடந்த 2018 இல் இலங்கை வந்திருந்தேன். இலங்கையர்கள் எந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும் . அதனால் நாம் இலங்கைக்கு வந்து கிரிக்கெட் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம். அவர்கள் கிரிக்கெட்டை நேசிப்பதுடன் அவர்களின் அணியையும் நேசிக்கின்றனர். கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த நாடு. எனவே மகிழ்ச்சியாக 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளோம் என இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ரி20 உலகக் கிண்ணத்தை வென்றதையடுத்து, ரோஹித் சர்மா இருபதுக்கு – 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஸிம்பாப்வேக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராகவும் ரி20 தொடர்களை சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்தியா கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி நாளை 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
ரோஹித் சர்மாவின் தலைமையில் நடைபெறும் போட்டியில் விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் இணைந்து பங்குபெறும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.
இந்நிலையில், தொடருக்கு முன்னரான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (1) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய கிரிககெட் அணியின் ஒருநாள் தலைவர் ரோஹித் சர்மா,
‘இந்த போட்டித் தொடர் சம்பியன் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டியல்ல. விளையாடப்போவது சர்வதேச போட்டி. நாம் சிறந்த கிரிக்கெட்டையே விளையாட எதிர்பார்க்கின்றோம். நாம் அனைத்தையும் சாதகமாகவே பார்க்க வேண்டும். நாம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகின்றோம் அத்துடன் கிரிக்கெட்டின் தரத்தையும் பாதுகாக்கவேண்டியதை நினைவில் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் நாம் எவ்வாறு கிரிக்கெட்டை விளையாடினோம் என்று உங்களுக்குத் தெரியும்.
நாம் ஒரு போட்டிகளில் விளையாடும் போது அதிலிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். அணி என்ற ரீதியில் நாமும் எதையாவது வித்தியாசமாக செய்ய முற்பட வேண்டும். நாமும் போட்டியின் போது வித்தியாசமானதை செய்ய முயற்சிப்போம். இந்திய அணிக்கு எப்போதும் கிரிக்கெட் தான் முக்கியமானது. அனைத்தையும் சாதகமாகவே எதிர்பார்த்து இலங்கையுடனான போட்டியில் கலந்துகொள்வோம்.
‘ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் சிறிது காலம் டில்லி மற்றும் மும்பையில் ஓய்வெடுத்துக்கொண்டேன். தற்போது கிரிக்கெட்டை நோக்கிய நகர்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ரி20 போட்டிகள் நிறைவுற்றுள்ள நிலையில் நாம் ஒருநாள் போட்டிகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.
‘இந்திய அணியின் முன்னைய பயிற்சியாளர்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பயிற்றுவிப்பாளர்களின் நடத்தைகள் மற்றும் அவர்களின் குணாம்சங்கள் வித்தியாசமானவை. ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி போன்றவர்களிடம் அவ்வாறான வித்தியாசமான குணாம்சங்களே காணப்பட்டன. கௌதம் கம்பீருடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். அவருடன் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். கௌதம் கம்பீர் அவரது பெயருக்கு ஏற்ப கம்பீரமானவர். ஆனால் அவர் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மிகவும் சந்தோசமாகவும் கலகலப்பாகவும் காணப்படுவார். அந்த வகையில் தொடர்ந்து பயணித்து நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ‘ஒருநாள் தொடரை எப்படி வெற்றி கொள்வது, எவ்வாறான சாதனைகளைப் புரிவது என்பது தான் நோக்கம் .அணி வீரர்களை தெரிவு செய்வதில் கடுமையான சிக்கல்கள் உள்ளது. ஒவ்வொருவருடைய திறமை மற்றும் தராதரங்களின் அடிப்படையிலும் தெரிவு செய்ய வேண்டும். நாளை இடம்பெறவுள்ள போட்டியில் விளையாடும் வீரர்கள் தொடர்பில் அன்றையதினம் தெரிந்துகொள்ள முடியும். அணிக்குரிய வீரர்களை தெரிவு செய்வதில் அனைத்து அணித் தலைவர்களுக்கும் சிக்கல்கள் உள்ளது. எவ்வாறாயினும் தலைமைப் பயிற்றுவிப்பாளருடன் கலந்தாலோலோசித்து இறுதி முடிவை எடுப்போம் என்றார்.