சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்களில் 102 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பில் அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர். சுமார் அறுபது எம்.பி.க்கள் ஏற்கனவே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
பெரமுன எடுக்கப்போகும் தீர்மானம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ தீர்மானத்தின் அடிப்படையில் தமது தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
பொதுஜன பெரமுன தனி வேட்பாளரை நிறுத்தினால் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க இந்த எம்பிக்கள் அனைவரும் தயாராக உள்ளனர்.
தனிப்பட்ட முடிவை எடுக்கத் தயார்
பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய நூற்றி இருபது எம்.பி.க்களில் அக்கட்சியின் அபிப்பிராயத்துடன் இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகவே உள்ளதாகவும், அக்குழுவில் உள்ள பெரும்பாலானவர்கள் கட்சியின் இறுதி முடிவின் அடிப்படையில் தமது தனிப்பட்ட முடிவை எடுக்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாளை திங்கட்கிழமை யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்க உள்ளதாக மகிந்த ராஜபக்ச (mahinda rajapaksa)தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.