‘கோமாளி’ படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குநராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’ எனும் படத்தின் மூலம் வெற்றிகரமான நடிகராகவும் அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில் பிரபலமான இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
காதல் திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி ஆகியோருடன் அரசியல்வாதியும், இயக்குநரும், நடிகருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் எல் ஐ சி எனும் டைட்டில் தான் முதலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த டைட்டில் சர்ச்சையானதால்.. தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என மாற்றப்பட்டு, இப்படம் தயாராகி வருகிறது.