‘பொன்னியின் செல்வன்’ பட புகழ் நடிகர் ஆதேஷ் பாலா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பிதா’ எனும் திரைப்படம் 23 மணித்தியாலம் 23 நிமிடத்திற்குள் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் என அனைத்து பணிகளையும் நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் சுகன் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிதா’ எனும் திரைப்படத்தில் ஆதேஷ் பாலா, சாம்ஸ், ஸ்ரீராம் சந்திரசேகர், ரிஹானா, அனு கிருஷ்ணா, மாஸ்டர் தர்ஷித், அருள்மணி, மாரிஸ் ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நரேஷ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ்.ஆர். ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. சிவராஜ் தயாரித்திருக்கிறார்.
நாளை (26) உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘பிதா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது இயக்குநர்கள் அரவிந்தராஜ் மற்றும் பேரரசு, நடிகர்கள் மகேந்திரன் மற்றும் மஜித் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”கேட்கும் சவால் மற்றும் பேசும் சவால் படைத்த மாற்று திறனாளியான பத்து வயது சிறுவன் – கடத்தப்பட்ட தொழிலதிபரையும், தனது சகோதரியையும் திருவிழா கூட்டத்தில் எப்படி தேடி கண்டுபிடித்து காப்பாற்றுகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. ஒரே இரவின் நடைபெறும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஒரே நாளில் படமாக்க வேண்டும் என்ற திட்டமிடலுடன் பணிகளை தொடங்கினோம். அதிலும் குறிப்பாக 23 மணி தியாலம் 23 நிமிடத்திற்குள் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, கடுமையாக உழைத்து படைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். படத்தில் பங்கு பற்றி நடித்த கலைஞர்களுக்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்று ஒத்திகையில் ஈடுபட்டோம். படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பின் காரணமாக படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்திருக்கிறோம். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகி இருக்கிறது” என்றார்.