கம்போடியாவின் நொம் பென், மொரோடெக் டேக்கோ தேசிய டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற ஆசிய கடல்சூழ் பிராந்தியத்திற்கான நான்காம் குழு டேவிஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றி அதிசிறந்த பெறுபேறுகளைப் பதிவுசெய்த இலங்கை அடுத்த வருடம் 3ஆம் குழுவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
8 நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றிய ஆசிய கடல்சூழ் பிராந்தியத்திற்கான நான்காம் குழு டேவிஸ் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இலங்கை இடம்பெற்றது.
இக் குழுவில் தனது ஆரம்பப் போட்டியில் கத்தாரிடம் 1 – 2 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது.
ஆனால், கிர்கிஸ்தானுடனான இரண்டாவது போட்டியில் 2 – 1 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை, கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை மிக இலகுவாக 3 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்டு தரமுயர்வுக்கான சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
தரமுயர்வுக்கான சுற்றில் குவைத்தை எதிர்கொண்ட இலங்கை 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்டு 3ஆம் குழுவுக்கு தரமுயர்வு பெற்றுக்கொண்டது. அப் போட்டியில் இரட்டையருக்கான 3ஆவது போட்டி நடத்தப்படவில்லை.
டேவிஸ் கிண்ண ஆசிய கடல்சூழ் பிராந்திய நான்காம் குழுவில் இலங்கை சார்பாக ஹர்ஷன கொடமான்ன (தலைவர்), அப்ன லினித் பெரேரா, அஷேன் மினோஸ் ஜுலான் சில்வா, தெஹான் சஞ்சய விஜேமான்ன, கனிக்க கொவித அகிர்ன ஜயதிலக்க ஆகியோர் இடம்பெற்றனர்.