தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்திருக்கும் அரசியல்மயமாக்கலைக் காண்பிப்பதாகவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் புற்றுநோயைப் போல சமூகத்தின் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்திவருவதாக அண்மையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இக்கருத்து தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அரச அதிகாரியான தேசபந்து தென்னக்கோன் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடாத்தி பொதுவான அல்லது அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுவதன் மூலம் ஓர் அரசியல்வாதியைப்போன்று செயற்படுகிறார் எனவும், இது பொலிஸார் மத்தியில் வலுவடைந்துள்ள அரசியல்மயமாக்கலைக் காண்பிக்கிறது எனவும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதும், பொலிஸார் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தைப் பின்பற்றி செயற்படுவதை உறுதிப்படுத்துவதுமே பொலிஸ்மா அதிபரின் கடமையாகும். ஆனால் பொலிஸார் மனித உரிமைகளை மீறியும், சட்டம், ஒழுங்கைப் புறந்தள்ளியும் செயற்படும் சூழ்நிலையில் பொலிஸ்மா அதிபர் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதானது எவ்வகையிலும் அவரது கடமைக்கு உட்பட்ட செயலன்று. மாறாக இது அவர் அவரது கடமையை நிறைவேற்றுவதற்குத் தவறியிருப்பதையே காண்பிக்கின்றது’ எனவும் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு அண்மையகால தொழிற்சங்க நடவடிக்கையை நியாயப்படுத்துவது அல்லது அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒருபுறமிருக்க, தொழிற்சங்கத்தை உருவாக்குவதும், அதில் அங்கம் வகிப்பதும், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதும் அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்ட உரிமைகள் எனத் தெரிவித்துள்ள அவர், கருத்திற்கொள்ளப்படாமல் இருந்த தொழிலாளர் உரிமைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஊடாகவே வென்றெடுக்கப்பட்டன என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.