பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.எதிரணியின் சுயாதீன உறுப்பினர்களான விமல் வீரவன்ச,கெவிந்து குமாரதுங்க, சந்திம வீரக்கொடி ஆகியோர் சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகளுக்கு திருத்தங்களை முன்வைத்தனர்.ஆளும் தரப்பினர் உறுப்பினர் சரத் வீரசேகர திருத்தங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்டமூலம் பெண்களை மாத்திரம் வரையறுத்ததாக அமைய வேண்டும் என்ற திருத்தத்தை முன்வைத்தார்.இந்த திருத்தம் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது இந்த திருத்தத்துக்கு ஆதரவாக 05 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளினால் கெவிந்து குமாரதுங்க முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம் குறித்து எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்ட கருத்துக்கு எதிரணியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பெண்களின் நலனுக்காக முன்வைக்கப்படும் இந்த சட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என பாராளுமன்ற பெண் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே சபையில் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து முன்வைக்கப்பட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபை முதல் சுசில் பிரேமஜயந்த சபைக்கு அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சட்டமூலத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் எதிரணியின் உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்கள் வாத பிரதி வாதங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டன.இந்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் சபை முதல்வர் புதிதாக பல திருத்தங்களை முன்வைத்தார்.அத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன.