கண்டி திகனவில் இந்த வருட ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட தேசிய ஒலிம்பிக் குழு சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாடிவந்த தேசிய ஒலிம்பிக் குழு இந்த வருடம் மத்திய மாகாணத்தில் நடத்துவதற்கு தீர்மானித்ததாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.
பாரிஸ் நகரில் உள்ள சோர்போனில் நவீன ஒலிம்பிக் இயக்கம் 1894ஆம் ஆண்டு ஜூன் மாதம் உதயமானதை நினைவுகூரும் வகையில் 1948ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.
ஒலிம்பிக் தினமானது, உலகெங்கிலும் உள்ள இளைஞர், யுவதிகள் விளையாட்டுத்துறையில் பங்கேற்பதை ஊக்குவிப்பதுடன், சிறப்பு, நட்பு மற்றும் மரியாதை ஆகிய ஒலிம்பிக் மதிப்புகளை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் பல்வேறு விளையாட்டுக்களிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் வகையில் இந்த மதிப்புமிக்க நிகழ்வை நடத்துவதில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு பெருமை அடைவதாக மெக்ஸ்வெல் டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக்கின் தாயகமான பிரான்சில் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா கொண்டாட்டத்துடன் இணைந்து, இலங்கையில் ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.
ஒலிம்பிக் தினம் கண்டி திகன விளையாட்டு மைதான தொகுதியில் நாளை புதன்கிழமை 19ஆம் திகதி பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறும்.
ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு ஏற்கனவே பல்வேறு விளையாட்டுத்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
ஒன்லைனில் டிக் டொக், திகன மைதானத்தில் ஸம்பா அமர்வு, விக்டோரியா கோல்வ் புல் தரையில் குதிரையேற்ற செயலமர்வு ஆகிய நிகழ்ச்சிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
ஒலிம்பிக தினக் கொண்டாட்ட தினமான நாளைய தினம் வரைதல் மற்றும் கைப்பணி, பெற்றோர் மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியர்களுக்கு இடையிலான உரையாடல், மாணவர்களுக்கான உடற்தகுதி மற்றும் தடைதாண்டி ஓட்டம், மரம் நடுகை திட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அத்தடன் 1200 பேர் பங்குபற்றும் ஒலிம்பிக் தின ஊர்வலம் மாலையில் நடைபெறும். இந்த ஊரவலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், இலங்கை விளையாட்டுத்துறை சங்கங்கள் அல்லது சம்மேளனங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தேசிய ஒலிம்பிக் குழு பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளனர்.
ஒலிம்பிக் தின ஊர்வலம் பல்லேகலை கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பித்து திகன விளையாட்டுத்தொகுதி மைதானத்தில் நிறைவடையும்.
இதனைவிட சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமாஸ் பெச்சின் செய்தி (வீடியோ ஒளிப்பதிவு), ஒலிம்பிக் தின கொண்டாட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் என்பன அகலத்திரையில் ஒளிபரப்பபடும்.
வரைதல் மற்றும் கைப்பணியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள், வழங்கப்படும். தடைதாண்டி ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இதனை விட ஒலிம்பிக் தினத்தை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும்.