தேர்தலை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் இரண்டாவது கூட்டத்தில் 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியாகும் கனவுடன் உலாவிக்கொண்டிருக்கும் எதிர்தரப்பினரது எந்தவொரு கூட்டத்திலும் இந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பங்கேற்கச் செய்ய முடியாதுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
புதிய கூட்டணியின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்த மக்கள் கூட்டம் சனிக்கிழமை (8)அம்பாந்தோட்டையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்று இந்த கூட்டத்தில் 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதி வேட்பாளராகும் கனவிலும், ஜனாதிபதியாகும் கனவிலும் உலாவிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியில் சிலரது எந்தவொரு கூட்டத்தில் இந்தளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு பேரூந்தினைக் கூட வரவழைக்காது அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மாத்திரம் ஆயிரக்கணக்கான மக்களை பங்கேற்கச் செய்துள்ளமை எமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். புதிய கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த இந்த பரந்துபட்ட அரசியல் கூட்டணி தேர்தலின் பின்னர் நிச்சயம் ஆட்சியமைக்கும்.
அடுத்த ஜனாதிபதியையும் ஆட்சியையும் தெரிவு செய்யக் கூடிய பலம் எமது கூட்டணிக்கு உள்ளது. எனவே ஏனையவர்கள் கனவு காணலாம். ஆனால் அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த மாவட்டங்களில் நாம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பங்கேற்கும் எம்.பி.க்களினதும், மக்களினதும் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.