ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்என நாம் தமிழர் கட்சியின் ஏற்பட்டாளர் சீமான் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்குஇ தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும் மகிழ்வினையும் அளிக்கிறது.
ஈழ இனப்படுகொலை நடைபெற்ற 15 ஆம் ஆண்டு நினைவுநாட்களை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினரான வைல்லி நிக்கல் சக 6 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கை இனக்கொடுமைகளுக்கு சனநாயக வழியில் நிரந்தரத் தீர்வுகாண ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அதிமுக்கிய தீர்மானத்தைப் பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். என்றழைக்கப்படும் அத்தீர்மானம் ஈழத் தமிழர்களுடனான இராசதந்திர உறவுகளை வலுப்படுத்த அமெரிக்க அரசினை வலியுறுத்துகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன் தமிழர்களும் சிங்களவர்களும் இறையாண்மை கொண்ட இரண்டு தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்ததையும் 1833ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பிரதேசங்களை இணைத்து பிரித்தானிய அரசு ஒற்றை ஆட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த வரலாற்றையும் அத்தீர்மானம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களின் கருத்துக்களைக் கேட்காமல்இ அவர்களின் ஒப்புதலின்றிக் கொண்டுவரப்பட்டது என்பதையும் அதனை அன்றைய தமிழர் தலைவர்கள் நிராகரித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அத்தீர்மானம் தமிழர்களின் உரிமைபெற்ற நல்வாழ்விற்கு 13வது திருத்தம் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக அமையாது என்பதையும் பதிவு செய்துள்ளது. மேலும் இலங்கை இனவாத அரசு தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதையும் தமிழர்களின் தாயகத்தை தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசமாகவே இன்றளவும் வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காகவே 1976ஆம் ஆண்டு தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அத்தீர்மானம் நினைவு கூர்ந்துள்ளது. அதுமட்டுமின்றிஇ 2006ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற அமெரிக்க அரசின் துணைச்செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை மேற்கோள்காட்டி ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை நடத்த அத்தீர்மானம் திடமாக வலியுறுத்துகிறது.
இத்தனை தெளிவுமிக்கத் தீர்மானத்தை கொண்டுவந்த வைல்லி நிக்கல் மற்றும் அவருடைய சக உறுப்பினர்களுக்கு என்னுடைய அன்பையும்இ நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் நிறைவேற்றித் தருவதோடு ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான முன்னெடுப்புகளை தொடங்க வேண்டுமெனவும் தமிழினம் எதிர்பார்த்து காத்து நிற்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலைக்குள்ளாகி 15 ஆண்டுகளாக அதற்கான நீதிகேட்டு பன்னாட்டு மன்றங்களில் உலகத் தமிழினம் இடையறாது போராடியும் இதுவரை எவ்வித நீதியும் கிடைத்தபாடில்லை. துயர்மிகு இச்சூழலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுஇ தமிழர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாத அமெரிக்க உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளெல்லாம் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்தின் பக்கமுள்ள நியாயத்தை உணர்ந்து தனித்தமிழீழ விடுதலையே தமிழர்களுக்கான இறுதி தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈழத்தாயகத்துடன் தொப்புள்கொடி உறவுகொண்டுள்ள இந்தியப் பெருநாடு சிங்கள இனவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும். இந்திய அரசின் இத்துரோகச்செயல்பாடுகள் அனைத்தும் 8 கோடி தமிழர்களின் இதயங்களில் இந்தியன் என்ற உணர்வு முற்றாக அற்றுபோகவே வழிவகுக்கும்.
ஈழத்தில் ஆயுதப்போராட்டம் மௌனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கற்பனைக் காரணங்களை கூறி விடுதலை புலிகள் மீதான தடையை தொடர்ந்து இந்தியா நீட்டித்து வருவது ஏன்? அமைதிக்கு ஆயுதபோராட்டமே தடையாக உள்ளது என்று ஈழ விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க துணைநின்ற இந்திய அரசு இனவழிப்பு போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் இலங்கை இனவாத அரசிடமிருந்து குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தை கூட பெற்றுத்தர முடியவில்லை என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு நிகழ்ந்த மிகப்பெரிய தலைகுனிவாகும். இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவு கொள்கை மிகத்தவறானது என்பதையே இத்தகைய அரசியல் தோல்விகள் காட்டுகிறது.