லக்னோவ் எக்கானா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (30) குறைந்த மொத்த எண்ணிக்கைகளைக் கொண்டதாகவும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் அமைந்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸை 4 விக்கெட்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.
17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 48ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸினால் நிர்ணியிக்கப்பட்ட சுமாரான 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
5 தடவைகள் சம்பியனான மும்பை இண்டியன்ஸ் இம்முறை ஐபிஎல் இல் 7ஆவது தோல்வியைத் தழுவியதால் அதன் இறுதிச் சுற்று வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
மும்பை இண்டியன்ஸைப் போன்றே லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.
அர்ஷின் குல்கர்னி (0) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். எனினும் கே.எல். ராகுலும் மாக்கஸ் ஸ்டொய்னிஸும் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர்.
ராகுல் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஆனால், மாக்கஸ் ஸ்டொய்னிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தீப்பக் ஹூடாவுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தார்.
எனினும் தீப்பக் ஹூடா (18), மாக்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.
மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 45 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ஏஷ்டன் டேர்னர் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். (133 – 6 விக்.)
எனினும் நிக்கலஸ் பூரன் (14 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (1 ஆ.இ.) ஆகிய இருவரும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றி பெறுவதை உறுதிசெய்தனர்.
பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஆரம்ப வீரர் இஷான் கிஷான், மத்திய வரிசையில் நெஹால் வதேரா, டிம் டேவிட் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடியதாலேயே மும்பை சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
ரி20 உலகக் கிண்ணத்திற்கு இந்திய அணியில் தெரிவாகியுள்ள ரோஹித் ஷர்மா (4), சூரியகுமார் யாதவ் (10), அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (0) ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.
இஷான் கிஷானும் நெஹால் வதேராவும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 53 ஓட்டங்களே மும்பை இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
இஷான் கிஷான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 32 ஒட்டங்க்ளைப் பெற்றார்.
தொடர்ந்து நெஹால் வதேராவும் டிம் டேவிடும் 6ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
நெஹால் வதேரா 46 ஓட்டங்களையும் டிம் டேவிட் ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மோஷின் கான் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: மாக்கஸ் ஸ்டொய்னிஸ்