சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.
இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும் வழிவகுத்திருக்கிறது.
உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது.
தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.
அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன.
நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும்.
முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.