யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் படமாக ஊழி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் 10ஆம் திகதி உலகளவில் அத்திரைப்படத்தை திரையிடவுள்ளதாகவும் படத்தில் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றிய ஈழத்து கவிஞர் தீபசெல்வன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் உருவாக்கப்பட்ட ஈழ திரைப்படமே ஊழி ஆகும். நாட்டில் இனவழிப்பு ஒன்று செய்யப்பட்ட பின்னர், தாம் நாட்டினை ஒன்றாகியதாக ஆட்சியாளர்கள் 2009ஆம் ஆண்டு கூறிய பின்னர் , கிழக்கு மாகாணத்தில் தொடங்கும் கதையே ஊழி திரைப்படம். இந்த திரைப்படம் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு சிறுவனின் வாழ்வு பற்றியும், 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழர்களின் இருண்ட யுகங்களை பற்றியும் பேசுகின்றது. இந்த திரைப்படத்தில் ஈழ கலைஞர்கள் , தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தென்னிலங்கை கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி இலங்கையில், யாழ்ப்பாணம், வவுனியா , மட்டக்களப்பு , திருகோணமலை உள்ளிட்ட பல திரையரங்குகளில் திரையிடவுள்ளோம். அதேவேளை 10ஆம் திகதியே கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற 11 நாடுகளில் 70 திரையரங்குகளில் திரையிடவுள்ளோம் என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சட்டத்தரணி கே, சுகாஷ் கருத்து தெரிவிக்கையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் படக்குழுவினர் நாடிய போது , எனக்கு படத்தில் நடிப்பதில் ஈடுபாடு இருக்கவில்லை. பின்னர் இந்த படத்தின் இயக்குனரான ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளியான ” சினம் கொள்” திரைப்படத்தை பார்த்த பின்னர் , அவரின் இயக்கத்தில் நடிப்பதில் எனக்கு தயக்கம் இருக்கவில்லை. இந்த திரைப்படம் தமிழர் வரலாற்றில் இடம்பிடிக்க கூடிய கலைப்படைப்பாக இருக்கும். இதனை வெற்றியடைய வைக்க வேண்டும். இதொரு நீதி கோரிய எமது பயணத்தின் வெற்றியாக அமைய வேண்டும். இந்த படத்தில் காதல் இருக்கும் காமம் இருக்காது. தமிழர்கள் அனைவரும் இப்படத்திற்கு பெருவரவேற்பு அளித்து படத்தினை வெற்றியடைக்க வைக்கவேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை படக்குழுவில் பணியாற்றிய அருணாசலம் சத்தியானந்தன் தெரிவிக்கையில், இந்த திரைப்படம் முற்று முழுதான ஈழ சினிமாவாக இருக்கும். 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் போர்க்கால காதல்களை , வீரங்களை, தியாகங்களை கொண்ட படத்தை உலகத்திற்கு தந்தது எமது ஈழ சினிமா இந்த நிலையில் போருக்கு பின்னர் அப்படியொரு கதை களத்தோட இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. இதொரு காத்திரமான திரைப்படமாக வெளிவரும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. தரமான படங்களை வரவேற்கும் பாங்கு, தமிழ் மக்களுக்கு உண்டு ஈழ சினிமா புதிய பரிமாணத்தில் புதிய அடையாளங்களோடு பயணிக்கும் என நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.
படத்தில் கதாநாயகனாக நடித்த ஆகாஷ் தெரிவிக்கையில், படப்பிடிப்புகள் சுமார் 25 நாட்கள் நடைபெற்றன. இந்த திரைப்படம் தமிழர் தாயக பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைய படங்கள் வெளிவருகிறது. தொழினுட்ப ரீதியில் எமது கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள். எமது கலைஞர்களை அடையாளம் காண இப்படியான படைப்புகள் உந்து சக்தியாக அமையும். எனவே இந்த திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என தெரிவித்தார்.